ஆழ்துளை கிணறுகள் அமைத்து சட்டவிரோதமாக தண்ணீர் எடுத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை? போலீசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-01-20 22:05 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், கோனாம்பேடு கிராம பொதுநலச்சங்கம் சார்பில் தாக்கல் செய்துள்ள கோர்ட்டு அவமதிப்பு வழக்கில், ‘ஆவடி அருகே உள்ள எங்கள் கிராமத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் திருடப்படுகிறது. மேலும், எங்கள் ஊரில் உள்ள ஏரியில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு கோனாம்பேடு கிராமத்தில் உள்ள நீர்நிலைகளையும், தண்ணீர் திருட்டு குறித்தும் நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று திருவள்ளூர் கலெக்டருக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை இதுவரை கலெக்டர் அமல்படுத்தவில்லை. எனவே, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

மசூதி, கோவில் அகற்றம்

இந்த வழக்கை கடந்த மாதம் விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர், தமிழகத்தில் மணல் மாபியா போல தண்ணீர் மாபியாக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன என்று வேதனையுடன் கருத்து தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.புருஷோத்தமன் ஆஜராகி வாதிட்டார்.

அதேபோல, கலெக்டர் சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கோனாம்பேடு கிராமத்தில் உள்ள ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஒரு கோவில், ஒரு மசூதி ஆகியவற்றை அதிகாரிகள் அகற்றி விட்டனர். அங்கு வீடு கட்டி குடியிருந்த 17 குடும்பத்தினருக்கும் மாற்று இடம் வழங்க வீட்டு வசதி வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர்களை அப்புறப்படுத்தவில்லை’ என்று கூறப்பட்டிருந்தது.

என்ன நடவடிக்கை?

மேலும், ‘சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுப்பதற்கு போடப்பட்ட 5 ஆழ்துளை கிணறுகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதுடன், செந்தில்குமார், ஜெயக்குமார் ஆகியோர் மீது 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ‘இந்த இரு நபர்கள் மீது கடந்த 14-ந் தேதிதான் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே, மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து வருகிற 22-ந் தேதி ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்