ஜனவரி 24 சனிப்பெயர்ச்சி - சமூக வலைதளங்களில் பரவிய தகவலுக்கு திருநள்ளாறு கோவில் நிர்வாகம் மறுப்பு

வரும் 24 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறும் என சமூகவலைதளங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என திருநள்ளாறு கோவில் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

Update: 2020-01-22 10:03 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலம், காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிபகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இங்கு, இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் சனிப்பெயர்ச்சி விழா என்பது வெகுவிமரிசையாக நடைபெறும். 

அப்போது, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து,  நளன் குளத்தில் நீராடி, சனிபகவானை தரிசனம் செய்வார்கள். இந்நிலையில், வரும் ஜனவரி 24 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

ஆனால் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, வரும் டிசம்பர் 27ஆம் தேதி தான் சனிப்பெயர்ச்சி நிகழும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு நிகழவுள்ள  சனிப்பெயர்ச்சி தொடர்பாக, சமூக வலைதளங்களில் பரவிய தகவல், பக்தர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, திருநள்ளாறு கோவில் தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வாக்கிய பஞ்சாங்கப்படி, வரும் டிசம்பர் 27ஆம் தேதி தான் சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, வரும் ஜனவரி 24 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறும் என்று சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் திருநள்ளாறு கோவில் தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்