திருச்சியில் பா.ஜனதா நிர்வாகி வெட்டிக்கொலை தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

திருச்சியில் பா.ஜனதா நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

Update: 2020-01-27 22:30 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

1984-ல் இருந்து பா.ஜனதா கட்சி பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்து வருகிறது. இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மீதான தாக்குதல் முதல் திருச்சி பா.ஜனதா நிர்வாகி விஜயரகு கொலை வரை நூற்றுக்கணக்கானவர்கள் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.

திருச்சி பா.ஜனதா நிர்வாகியை பயங்கரவாதிகள்தான் கொலை செய்து உள்ளனர் என போலீசாரும் உறுதி செய்துள்ளனர். ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் குண்டுவீச்சு போன்ற சம்பவங்களும் நடந்து வருகிறது.

இந்து என்ற பெயரில் யாரும் உணர்வுடன் வாழக்கூடாது. இந்து உணர்வு என்று கொண்டால் கொல்ல தகுதி என்று பயங்கரவாதிகள் நினைக்கின்றனர். இவர்களுக்கு தி.மு.க., காங்கிரஸ் உள்பட கட்சிகள் திட்டமிட்டு துணையாக உள்ளனர். தமிழகத்தில் இந்துக்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன.

இந்து என்ற மதமே இல்லை என்ற புதிய கருத்தை பரப்பி வருகின்றனர். இந்து தெய்வங்கள் சொந்தமில்லை என்று கூறுகின்றனர். தமிழகத்தில் மதமாற்றங்கள் பெரிய அளவில் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. இதற்கு எதிராக யார் செயல்பட்டாலும் தாக்கப்படுகின்றனர்.

திருச்சியில் நடந்த கொலை அறிவிக்கப்பட்ட யுத்தமாக நினைக்கிறேன். இந்து என்ற உணர்வுடன் யாரும் வாழக் கூடாது என்பதற்கான யுத்தத்தை தொடங்கிவிட்டதாக நினைக்கிறேன். அதன் வெளிப்பாடுதான் கொலை சம்பவம் நடக்கிறது. இதில் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை குறித்து சட்டமன்றத்தில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் கேள்வி எழுப்பவில்லை. அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதுதான் பா.ஜனதாவின் நிலை. எந்த மக்களுக்கும் எதிரான செயலை செய்ய மாட்டோம் என்ற உறுதிபாட்டுடன் பிரதமர் மோடி அரசு செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்