இந்து ஆன்மிக கண்காட்சியில் சீனிவாச திருக்கல்யாணம் இன்று நடக்கிறது

இந்து ஆன்மிக சேவை கண்காட்சி நிறைவு விழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) மாலை சீனிவாச திருக்கல்யாணம் நடக்கிறது.

Update: 2020-02-02 22:15 GMT
சென்னை, 

இந்து ஆன்மிக மற்றும் சேவை மையம் மற்றும் பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளை சார்பில், சென்னை, வேளாச்சேரி குருநானக்கல்லூரியில் 11-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடைபெற்று வருகிறது.

5-வது நாளான நேற்று, இந்து ஆன்மிகத்தில் புதைந்துள்ள 6 நற்பண்புகளில் ஒன்றான ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை வணங்குதலை, இளைய தலைமுறையினர் முழுமையாக கடை பிடிக்கும் வகையில், 1,008 ஆசிரியர்கள்- பெற்றோர்களை வணங்கும் வகையில் ‘மாத்ரு, பித்ரு வந்தனம்- ஆச்சார்ய வந்தனம்’ என்ற தலைப்பில் ஆசிரியர்கள் கவுரவிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ஆதம்பாக்கம் டி.ஏ.வி. பாலசரவணா மேல்நிலைப்பள்ளி, ஆதம்பாக்கம் ஜெயரஞ்சனி பள்ளி, ஜோதிநகர் விவேகானந்தா பள்ளி, திருவான்மியூர் சங்கரா பள்ளி, ஆதம்பாக்கம் பீட்டா மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 1,008 மாணவ- மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்து வழிப்பட்டனர். பாதபூஜை செய்த மாணவர்களை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆசீர்வாதம் செய்தனர்.

நிகழ்ச்சியை, பண்பு மற்றும் கலாசார முனைவு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.ராஜலட்சுமி தொடங்கி வைத்து பேசும் போது, ‘பாரம்பரியமாகவே குருவை வணங்குவது நம்முடைய சமயத்திலேயே உள்ளது. மாணவர்களுக்கு இருளை நீக்கி அறிவை வழங்குவதும், குற்றங்களை நீக்கும் உயரிய பணியை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர். குருபதத்தை மாணவர்கள் பற்றிக்கொண்டால் வாழ்க்கையில் மேல்நிலையை அடைய முடியும்’ என்றார்.

கண்காட்சியையொட்டி பள்ளி மாணவிகளுக்கு பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான பல்லாங்குழி, பூ தொடுப்பது, பானையில் ஓவியம் வரைவது உள்ளிட்ட 227 போட்டிகளுக்கான இறுதி போட்டி நேற்று நடந்தது.

120 நடுவர்கள் முதல் 3 இடங்களுக்கு வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். அவர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

வெள்ளிமலை விவேகானந்த ஆஸ்ரமம் அரங்கு உள்ளிட்ட அரங்குகளை பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் மற்றும் ஆதீனங்கள், பள்ளி மாணவர்கள், கல்வியாளர்கள், அரசு உயர் அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட 5.5 லட்சம் பேர் நேற்று பார்வையிட்டனர்.

கடந்த 5 நாட்களாக 16 லட்சம் பேர் பார்வையிட்டதாக நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். 6 நாட்களாக நடந்த கண்காட்சி இன்று (திங்கட்கிழமை) நிறைவு பெறுகிறது. மாலை 6.15 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. கண்காட்சி ஏற்பாடுகளை துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, பண்பு மற்றும் கலாசார முனைவு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்