ரஜினியின் ஆன்மீக அரசியல் முகமூடி அம்பலமாகிவிட்டது - கே.எஸ்.அழகிரி

ரஜினியின் ஆன்மீக அரசியல் முகமூடி அம்பலமாகிவிட்டது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-05 09:11 GMT
சென்னை,

குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய முஸ்லீம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த சட்டத்தின் படி இந்திய முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டால் அவர்களுக்காக தான் முதல் ஆளாக குரல் கொடுப்பேன். சிஏஏ விவாகாரத்தில் பீதி கிளப்பட்டு உள்ளது.  அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காக தூண்டி விடுகிறார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த்  கூறியிருந்தார்.

இந்நிலையில், ரஜினியின் ஆன்மீக அரசியல் முகமூடி இன்றைக்கு அம்பலமாகிவிட்டது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்த நடிகர் ரஜினிகாந்த், இதனால் நாட்டு மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, அரசியல் கட்சிகள் மக்களிடையே தவறான பிரச்சாரத்தின் மூலம் பீதியை கிளப்பி வருகிறார்கள் என்று கருத்து கூறியிருக்கிறார். எப்படியோ பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. ரஜினிகாந்த் யார் என்பதை அடையாளம் காட்டுவதற்கு இக்கருத்து ஒன்றே போதும். 

ஆன்மீக அரசியல் என்ற முகமூடி இன்றைக்கு கிழித்தெறியப்பட்டிருக்கிறது. மதங்களை பிளவுபடுத்துவது தான் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியலா ? சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பிறகு நீ எந்த மதத்தைச் சார்ந்தவன் ? உன் தந்தை எந்த மதத்தைச் சார்ந்தவன் ? நீ எங்கே பிறந்தாய் ? என்று ரிஷிமூலம், நதிமூலம் கேட்டு ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறுவது தான் ஆன்மீக அரசியலா ?

குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து பேசுகிற ரஜினிகாந்தை தமிழக மக்கள் புரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பை அவரே வழங்கியிருக்கிறார். அவர் யார் என்பது இப்போது தெரிந்து விட்டது. இதன்மூலம் தமிழர்களின் விரோதியாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். எனவே, தமிழக அரசியலில் வகுப்புவாத பா.ஜ.க.வுக்கு பல்லக்கு தூக்குவதற்கு ரஜினிகாந்த் தயாராகிவிட்டார்.  ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் முகமூடி இன்றைக்கு அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது.  ரஜினியை நடிகராக பார்த்த மக்கள், பாஜகவின் ஊதுகுழலாக பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்