மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-30 12:03 GMT

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி காவியன் நகரைச் சேர்ந்தவர் சரவணபாண்டியன். இவருடைய மனைவி நிர்மலா தேவி (வயது 54). அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணித உதவி பேராசிரியையாக பணியாற்றினார். இவர் தன்னிடம் படிக்கும் சில மாணவிகளிடம் செல்போனில் பேசி, நான் சொல்லும் சில வழிமுறைகளை கேட்டால் உங்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று கூறி, மாணவிகளை பாலியல் ரீதியாக தவறாக வழிநடத்த முயற்சி செய்தார் என்று கடந்த 2018-ம் ஆண்டு புகார் எழுந்தது. இது தொடர்பான ஆடியோ வைரலானது.

அதையடுத்து, பேராசிரியை நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் அளித்தனர். அதன் பேரில் அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இதற்கிடையே இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, நிர்மலாதேவி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக்கோரி அருப்புக்கோட்டை போலீஸ் நிலையத்தில் கல்லூரி செயலாளர் ராமசாமி புகார் அளித்தார். மேலும் நிர்மலாதேவி மீது மாணவிகள் 5 பேரும் புகார் தெரிவித்தனர். மாணவிகளின் புகார் கடிதம், நிர்மலா தேவி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கடிதம், மாணவிகளுக்கு அவர் அனுப்பிய குறுந்தகவல்கள், கல்லூரி கல்வி இணை இயக்குனரின் அறிக்கை உள்ளிட்டவை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து நிர்மலாதேவியை கைது செய்தனர். மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய  வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவராக இருந்த கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

ஜாமீனில் வெளியே வந்த நிர்மலாதேவி உள்பட 3 பேரும் கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகி வந்தனர். சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் ரகசிய வாக்குமூலங்கள் பெறப்பட்டன. அனைத்து விசாரணையும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது

அப்போது காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகிய 2 பேரையும் விடுதலை செய்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார். பேராசிரியை நிர்மலாதேவி குற்றவாளி என தீர்ப்பு அளித்தார். அவருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அதன்படி, பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.2.42 லட்சம் அபராதம் விதித்தும் நீதிபதி பகவதி அம்மாள் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே சிறையில் இருந்த காலங்களை தவிர்த்து மீதி நாட்கள் சிறையில் இருப்பார் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்