சென்னையில் சாரல் மழை பெய்தது: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2020-02-09 22:30 GMT
சென்னை, 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் நிறைவு பெற்றது. தமிழகம் வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பை விட 2 சதவீதம் அதிகம் மழையை பெற்றது. பருவமழை நிறைவு பெற்றதும், பனி காலம் தொடங்கி, அதிகாலையில் நடு நடுங்க வைக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அவ்வப்போது லேசான மழையும் பெய்து வருகிறது.

அந்த வகையில் கடலோர தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

தென் தமிழகம் முதல் உள் கர்நாடகா வரை வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி கடந்த 8-ந்தேதி நிலவியது. அதன் தொடர்ச்சியாக தற்போது (நேற்று) கிழக்கு திசையில் ஈரப்பதத்துடன் கூடிய காற்று இருக்கிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) கடலோர மற்றும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கிழக்கு திசையில் இருந்து ஈரப்பதத்துடன் கூடிய காற்று இருந்த காரணத்தினால், சென்னையில் நேற்று காலை 11 மணிக்கு மேல் ஆங்காங்கே சாரல் மழை பெய்தது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக சென்னையில் அதிகாலையில் குளிர், பகலில் வெயில் என்று இருந்த சூழ்நிலை மாறி, நேற்று காலையில் கருமேகங்கள் சூழ்ந்து இருந்ததை பார்க்க முடிந்தது.

மேலும் செய்திகள்