வரதட்சணை கொடுமை பிரச்சினை: ஐ.பி.எஸ். அதிகாரியை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு மனைவி மனு

வரதட்சணை கொடுமை பிரச்சினையில், ஐ.பி.எஸ். அதிகாரியை கண்டித்து சென்னையில் உண்ணாவிரதம் இருக்க அவருடைய மனைவி போலீசில் மனு அளித்தார்.

Update: 2020-02-10 23:15 GMT
சென்னை, 

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் அருணா (வயது 24). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவரது கணவர் ஆனந்த் கேரள மாநிலத்தில் ஐ.பி.எஸ். (பயிற்சி) அதிகாரியாக உள்ளார். கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.

இந்தநிலையில், தனது கணவர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினார் என்றும், தன்னை அடித்து உதைத்து கொடுமைபடுத்தினார் என்றும், சென்னை தேனாம் பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அருணா புகார் கொடுத்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அருணாவின் புகார்களுக்கு அவரது கணவர் ஆனந்த் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் அருணா சென்னை ஐகோர்ட்டு உதவியை நாடினார். அருணா கொடுத்த புகார் மனு மீது உரிய வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்தநிலையில், நேற்று அருணா தனது தாயாருடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை தேனாம்பேட்டை போலீசார் மதிக்கவில்லை. தற்போது நான் கொடுத்த புகார் மனு, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் துணை கமிஷனர் அலுவலகத்தில் உள்ளது. எனது மனுவை ரத்து செய்யும் நோக்கத்தில் செயல்படுகிறார்கள். எனது கணவர் ஐ.பி.எஸ். அதிகாரி என்பதால், அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்குகிறார்கள். விரைவில் போலீசார் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்வேன்.

மேலும் எனக்கு நியாயம் கேட்டு சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளேன். அதற்கு அனுமதி கேட்டு கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளேன். எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்