அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு: 5 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு: விரைவில் விசாரணை

அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் 5 ஆண்டு சிறை பெற்றவர், அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

Update: 2020-02-18 22:45 GMT
சென்னை, 

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளி சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் பாபு என்பவர் விசாரணை காலத்தில் சிறையிலேயே இறந்துவிட்டதால், மற்ற 16 பேருக்கு எதிரான வழக்கில் கடந்த 3-ந் தேதி தீர்ப்பு கூறிய சென்னை ‘போக்சோ’ சிறப்பு கோர்ட்டு குற்றம்சாட்டப்பட்டவர்களில் குணசேகரன் என்பவரை மட்டும் விடுதலை செய்தது.

மீதமுள்ள 15 பேரில், 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இதில் 5 ஆண்டு சிறை தண்டனை பெற்ற உமாபதி, தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

அந்த தாக்கல் செய்த மனுவில், ‘எலக்ட்ரீசியனான என்னை, வழக்கில் பிளம்பர் என்று போலீசார் குறிப்பிட்டுள்ளனர். முதல் தகவல் அறிக்கையில் எனது பெயர் இல்லை. ஆனால், பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் எனக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார். ஐகோர்ட்டில் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

மேலும் செய்திகள்