உடல்நலக்குறைவால் உயிர் பிரிந்தது சென்னை திருவொற்றியூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மரணம் - மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை திருவொற்றியூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

Update: 2020-02-28 00:15 GMT
சென்னை, 

சென்னை திருவொற்றியூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கே.பி.பி.சாமி (வயது 57). தி.மு.க. மீனவரணி மாநில செயலாளராகவும் இருந்தார்.

சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட கே.பி.பி. சாமி ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் கடந்த சில மாதங்களாக வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இதனால் நடந்து முடிந்த தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் கே.பி.பி.சாமி கலந்துகொள்ளவில்லை. இந்தநிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து கே.பி.பி. சாமி உடல் திருவொற்றியூர் கே.வி.கே. குப்பத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக் காக வைக்கப்பட்டது.

கே.பி.பி.சாமி உடலுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, கனிமொழி எம்.பி., டாக்டர் கலாநிதி வீராசாமி எம்.பி., இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு உள்பட தி.மு.க. நிர்வாகிகளும், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, த.மா.கா. பொதுச்செயலாளர் சுகுமாறன், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஆரூண், சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க முன்னாள் தலைவர் ஆர்.சி. பால்கனகராஜ், பேராயர் எஸ்றா சற்குணம் மற்றும் அந்த தொகுதியை சேர்ந்த தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் கே.பி.பி.சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அ.ம.மு.க. மாநில மீனவர் அணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆறுமுகம் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளான அன்பழகன், எம்.இ.ராஜா, சங்கர் ஆகியோர் கே.பி.பி.சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மீனவ கிராமங்களை சேர்ந் தவர்கள் ஒவ்வொரு கிராமம் கிராமமாக சாரை சாரையாக வந்து கே.பி.பி. சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தி சென்றனர்.

கே.பி.பி.சாமியின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அவருடைய உடல் பிற்பகல் 3 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு பட்டினத்தார் சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.

கே.பி.பி.சாமி 2006-2011-ம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பரசு பிரபாகரன் என்ற மகனும், உதயா என்ற மகளும் உள்ளனர். அவரது மனைவி உமா மற்றும் மகன் இனியவன் ஆகியோர் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டனர். கே.பி.பி.சாமிக்கு சங்கர், சொக்கலிங்கம், இளங்கோ ஆகிய சகோதரர்களும், 2 சகோதரிகளும் உள்ளனர். இதில் சங்கர் தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஆவார்.

கே.பி.பி.சாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மு.க. ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், “நான் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவரை ஆஸ்பத்திரியில் சந்தித்தேன். அவர் என் கையை பிடித்துக்கொண்டு தன்னையே மறந்து, நாகூர் அனிபா பாடிய கட்சி பாடலை என்னிடம் பாடினார். அப்போது அவர் எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார். அவர் உடல்நலம் பெற்று விரைவில் திரும்பி வருவார் என்று நாங்கள் காத்திருந்தோம். ஆனால் திடீரென்று அவர் உயிர் பிரிந்து விட்டது என்ற செய்திக்கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம்” என்றார்.

பின்னர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கே.பி.பி.சாமி தி.மு.க.வின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி கருணாநிதியின் அன்பையும், பாராட்டுதலையும் பெற்றவர். மீனவர் சமுதாயத்தின் விடிவிளக்காகவும் இருந்தவர். தொகுதி மக்களுக் காகவும், மீனவர் சமுதாயத்துக்காகவும் இரவு, பகலாக பணியாற்றும் ஒரு செயல் வீரரை இந்த தொகுதி மக்கள் இழந்து வாடுகிறார்கள்.

தி.மு.க.வின் போராட்டங்களை முன்னின்று நடத்திடவும் உற்சாகமிக்க தொண்டர்களை உருவாக்கவும் ஆர்வம் குறையாமல் தொடர்ந்து உழைத்து வந்த கே.பி.பி. சாமியை இழந்து நானும், தி.மு.க. தொண்டர்களும் தவிக்கிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், மீனவர் சமுதாய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

கே.பி.பி.சாமி மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் எம்.பி. சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

கே.பி.பி.சாமி மறைவால் தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலம் 99 ஆக குறைந்து உள்ளது. தற்போது திருவொற்றியூர் தொகுதி காலி இடம் என்று அறிவிக்கப்படும். அதன்பின்னர் அந்த தொகுதியில் 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஆனால் அடுத்த ஆண்டு (2021) சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற இருப்பதால், இடைத்தேர்தல் நடைபெறுமா? என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை பொறுத்து அமையும்.

2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் பதிவான 1 லட்சத்து 90 ஆயிரத்து 116 ஓட்டுகளில், கே.பி.பி. சாமி 82 ஆயிரத்து 205 ஓட்டுகள் (43.25 சதவீதம்) பெற்று வெற்றி பெற்றிருந்தார். அ.தி.மு.க. வேட்பாளர் பி.பால்ராஜ் 77 ஆயிரத்து 342 ஓட்டுகளை பெற்றார்.

அதன் விவரம் வருமாறு:-

மொத்த ஓட்டுகள் - 2,86,833

பதிவானவை - 1,90,116

கே.பி.பி.சாமி (தி.மு.க.)

- 82,205

பி.பால்ராஜ் (அ.தி.மு.க.)

- 77,342

ஏ.வி.ஆறுமுகம் (தே.மு.தி.க.)

- 13,463

ஆர்.வசந்தகுமாரி (பா.ம.க.)

- 4,025

கோகுல் (நாம் தமிழர்)

- 3,961

எம்.சிவக்குமார் (பா.ஜ.க.)

- 3,313

2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் 1 லட்சத்து 58 ஆயிரத்து 204 ஓட்டுகள் பெற்று கே.பி.பி.சாமி வெற்றி பெற்றிருந்தார். 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவர் வெற்றி பெறவில்லை.

மேலும் செய்திகள்