டெல்லி கலவரம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்

டெல்லி கலவரம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நிருபர்களிடம் கூறியதாவது:-

Update: 2020-02-28 22:15 GMT
ஆலந்தூர், 

டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் யார்?. எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள்? என்ற விவரங்கள் வெளியாகவில்லை. மதவெறி பிடித்த சக்திகள் வீதியில் துப்பாக்கி ஏந்தி வந்து, போராட்டம் நடத்தியவர்களை படுகொலை செய்து உள்ளனர். இதில் சுப்ரீம் கோர்ட்டும், டெல்லி ஐகோர்ட்டும் தலையிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? என்று கண்டித்த பிறகு வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

வன்முறைக்கு காரணமாக இருந்து உள்ளதாக பா.ஜனதா முன்னணி தலைவர்கள் சிலரின் பெயர்களை சுட்டிக்காட்டி அவர்கள் மீது ஏன் வழக்கு பதியவில்லை? என்று கேள்வி எழுப்பிய டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி முரளிதரன், தற்போது பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இது வன்மையான கண்டனத்துக்குரியது. நீதித்துறையில் இந்த அளவுக்கு அரசியல் தலையீடு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

டெல்லியில் நடந்த வன்முறையை கண்டித்தும், உயிர்கள் பலியானதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். டெல்லி கலவரம் தொடர் பாக குற்றவியல் நீதித்துறை விசாரணை கமிஷன் அமை க்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 1-ந் தேதி சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்