காதல் கணவர் நன்றாக இருந்தால் போதும்: இணையவாசிகளின் இதயங்களை கவர்ந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

தன்னை விட்டு சென்ற காதல் கணவர் எங்கிருந்தாலும் நன்றாக இருந்தால் போதும் என கூறி, இணையவாசிகளின் இதயங்களை கவர்ந்த இளம்பெண்,இன்று அதே இணையவாசிகளால் தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Update: 2020-03-03 15:17 GMT
சென்னை,

பெயர் தெரியாத இந்த இளம்பெண் தான் கடந்த சில வாரங்களாக இணையதளத்தின் ஹாட் டாப்பிக். ஒரு தனியார் சேனலுக்கு பேட்டியளித்த அந்த இளம்பெண்ணிடம் இந்த கால காதல் பற்றி கேள்வி முன்வைக்கப்பட்டது. அதை ஏன் தான் செய்தேனோ என அந்த பெண் புலம்பியது கேலியாகவே பார்க்கப்பட்டது. போக போக, அந்த பெண், பேசியது.. சே.. இப்படி ஒரு பெண்ணை விட்டு  செல்ல எப்படி மனம் வந்த‌து என சிலருக்கு பரிதாபத்தையும், சிலருக்கு அந்த பெண்ணின் கணவர் மீது ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. 

இந்த பெண்ணுக்கு ஆதரவாக இணையதளங்களில் மீம்ஸ்கள் பறந்தன. வாட்ஸ் ஆப் , இன்ஸ்டாகிராம், பேஸ்புக் குறிப்பாக டிக்டாக் என எந்த பக்கம் திரும்பினாலும், இந்த பெண்ணின் பேச்சுகளும், அவருக்கு ஆதரவு குரல்களுமே ஒளித்தன. இதன் மூலம் ஒரே பேட்டியில் புகழின் உச்சிக்கு சென்ற அந்த இளம்பெண், டிக்டாக்கில் ஆர்.கே.ராஜா4949 என்ற பெயரில் காலடி எடுத்து வைத்தாக தெரிகிறது.

அப்போதே பலரும் டிக்டாக் பயன்படுத்தவேண்டாம் என கூறியும் பொருட்படுத்த‌தாமல் அந்த பெண், தொடர்ந்து வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு எதிரான கருத்துகளும் துளிர் விட ஆரம்பித்தன. 

இந்த நிலையில் இந்த பெண்ணை போலவே தோற்றம் கொண்ட கேரள பெண் ஒருவரின் ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதாக கூறப்படுகிறது. இதனால் தான் உன் கணவர் உன்னை பிரிந்து சென்றுவிட்டார் என கூறி பலரும் வீடியோ பதிவிட்டு வந்தனர். 

இந்த நிலையில், மார்ச் 2 -ம் தேதி நள்ளிரவில் அந்த பெண் ரத்தக்கறை படிந்த ஆடையுடன், வாயில் இருந்து ரத்தம் வழிய ,  வீடியோ பதிவிட்டார். இதை தொடர்ந்து பேசிய அந்த பெண்ணின் சகோதரி, இருவரும் விஷம் குடித்து விட்டதாகவும், எங்கள் இறப்புக்கு நீங்கள் அனைவருமே காரணம் என கூறியும் வீடியோ வெளியிட்டார்.

குறிப்பாக,  வீடியோ எடுக்கும் நபர் சில வார்த்தைகளை கூற சொல்வதும் அதன் படி பெண் கூறுவதும் பதிவாகி இருந்தாக தெரிகிறது.  இதனால் மீண்டும் இணையதளவாசிகள் அந்த பெண்ணுக்கு ஆதரவாக அனுதாப அலைகளை வீசி வருகின்றனர்.

எது எப்படியோ இந்த பெண்கள் தற்கொலை முயற்சித்த‌து உண்மையானால், அவர்களை காப்பாற்ற வேண்டும். பொய் என்றால், அவர்களை இவ்வாறு அடித்து துன்புறுத்தி பேச நிர்பந்தம் செய்த‌து யார் என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது. 

பள்ளி குழந்தைகள் முதல், திருமணமான பெண்கள் வரை பலரது வாழ்க்கையில் நீங்கா வடுக்களையும் சிலருக்கு முடிவுரையும் எழுதி வருகிறது இந்த டிக்டாக் எனும் செயலி. அடுத்த‌தாக எந்த எல்லைக்கு செல்லப்போகிறதோ என்பதே பலரது கவலையாக உள்ளது.

மேலும் செய்திகள்