‘ஜோலார்பேட்டையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை’ - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Update: 2020-03-17 22:30 GMT
சென்னை, 

சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், ஜோலார்பேட்டை, சின்னக்கோடியூர் கிராமத்தில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு பேசினார். அப்போது அவர் வெடிகுண்டு கலாசாரம் தமிழ்நாட்டில் தலைதூக்க தொடங்கி விட்டது என்றும், வீடு புகுந்து தாக்கும் சம்பவமும் அதிகரித்து விட்டது என்றும் குற்றம்சாட்டி பேசினார். இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து கூறியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் நேற்று, 16-ந்தேதி அன்று பிற்பகல் 1 மணியளவில் சின்னக்கோடியூர் கிராமத்திலுள்ள தங்கவேலு பீடி மண்டி திடீரென தீப்பிடித்து எரிந்ததில் சுமார் 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 30 பீடி இலை பண்டல்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. ஊழியர்கள் தீயை அணைத்தனர். இந்த மண்டியில் 10 தொழிலாளர்கள் தான் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பீடி மண்டியில் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி சகோதரர்கள் அழகிரி, ராவணன் ஆகியோர் பங்குதாரர்களாக இருந்து நடத்தி வருகின்றனர். கே.சி.காமராஜ் நிர்வாகம் செய்து வருகிறார்.

இது ஒரு சாதாரண தீ விபத்து தான். ஆனால் ஊடகங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக ஒரு தவறான செய்தி வெளிவந்திருக்கிறது. இதுவரை இது தொடர்பாக எந்தவிதமான புகார்களும் காவல்துறையில் பெறப்படவில்லை. யாரும் கொடுக்க வில்லை. இது சம்பந்தமாக யாரும் கைது செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்