கொரோனா பரவல்: ஒரு நாள் மட்டும் சுய ஊரடங்கு பயன் என்ன? எது இயங்கும்- எது இயங்காது?

ஒரு நாள் மட்டும் சுய ஊரடங்கு உத்தரவால் கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியுமா என்பதை பார்க்கலாம்.

Update: 2020-03-21 10:56 GMT
சென்னை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கி வருகிறது. அதனை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  பாதிக்கப்பட்ட நாடுகள் எடுத்து வருகின்றன.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 400ஐ தாண்டியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா நோய் தொற்றுக்கு மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் மட்டும் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 275ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் தென்கொரியாவில் 8 பேரும், சீனாவில் 7 பேரும், சிங்கப்பூரில் 2 பேரும், பாகிஸ்தான், மெக்சிகோ, மொரீசியஸ் நாடுகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உலகில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 400ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 4 பேர் உயிர் இழந்து உள்ளனர் . 298 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

உலகில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 76 ஆயிரத்து 600ஐ தாண்டியுள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  பாதிக்கப்பட்ட நாடுகள் எடுத்து வருகின்றன.

அந்த வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை இந்தியா முழுவதும் மக்கள் அனைவரும் சுய ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் தொடர்ச்சியாக கொரோனாவின் தாக்கம் அதிகமாகி கொண்டே வருவதால் நோய் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் வைரஸின் தாக்கம் அதிகமாக பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக நாளை காலை 7 மணிமுதல் இரவு 9 மணி வரை மக்கள் யாரும் வெளியேவர வேண்டாம் எனவும், அந்த நாள் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக 60 வயதிற்கு மேல் இருப்பவர்கள் வெளியே வர வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

இப்படி ஒரு நாள் மட்டும் ஊரடங்கு உத்தரவு போட்டால் கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியுமா என பல்வேறு கேள்விகள் மக்களிடையே எழுந்து உள்ளன. ஆனால் இந்த ஊரடங்கு உத்தரவு போடுவதன் மூலம் எதிர்காலங்களில் ஏற்படும் பாதிப்பிலிருந்தும் தற்காத்து கொள்வதற்கான ஒரு முன்னோட்டமாக இருக்கும் என கருதப்படுகிறது.

ஏனெனில் கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்ட சீனாவின் உகான் மாகாணத்தில் இதேபோன்று இரண்டு மாதங்கள் லாக்டவுன் முறையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது வீடுகளில் தங்கியிருந்த மக்களில் யாருக்கெல்லாம் கொரோனா தாக்கப்பட்டது என்பது விரைவாக கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இரண்டு மாதங்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் பொருளாதார ரீதியில் சிக்கல்கள் ஏற்படும் என்பதால் 22 ஆம் தேதி மட்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அப்போது நாடு முழுவதும் உள்ள மக்களின் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது என்பதை கண்காணிக்க இந்த ஒத்திகை ஒரு சோதனை களமாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இனி வரும் நாட்களில் கொரோனா வைரஸ் தீவிரமடையும் பட்சத்தில் நாடு எதிர் கொள்ளும் புதிய சவால்களை சமாளிக்க இது போன்ற ஊரடங்குகளை அமல்படுத்த வேண்டிய தேவை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால் நாளை நாடு முழுவதும் சுய ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

சுய ஊரடங்கை அடுத்து தமிழகத்தில் ஒரு சில சேவைகளைத் தவிர மற்ற அனைத்தும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

* வணிக வளாகங்கள், திரையங்குகள், பொழுதுபோக்கு பூங்காங்கள், கடைகள், உணவகங்கள் திறக்கப்படாது.

* கால் டாக்சி, ஆட்டோ போன்றவை பொதுமக்களின் அவசர பயணத்திற்காக இயக்கப்படும்.

* காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு பேருந்துகள் இயங்காது.

* மெட்ரோ ரயில் சேவைகளும் நாளைய தினம் ரத்து செய்யப்பட்டுள்ளன.எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில் சேவையும் நாளை இருக்காது.

* டெல்லி, பெங்களூரு, சென்னையை தொடர்ந்து மும்பையில் நாளை மெட்ரோ ரயில் சேவை ரத்து என அறிவிப்பு

* கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று 3-மணிக்கு மேல் கடற்கரைகளில் மக்களுக்கு அனுமதி இல்லை.கொரோனா முன்னெச்சரிக்கை: சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம் ஆகிய கடற்கரைகளுக்கு செல்ல இன்று பிற்பகல் 3 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை மக்களுக்கு அனுமதி இல்லை 

மக்களிடம் விழிப்புணர்வு பணிகளை முடுக்கி விட்டு, தடுப்பு நடவடிக்கைகளை விரைவாக செயல்படுத்தவே ஞாயிற்றுக்கிழமை, சுய ஊரடங்கை கடை பிடிக்க நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது

இது குறித்து பிரதமர் வெளியிட்டு உள்ள டுவிட்டில்  சுய ஊரடங்கான நாளை தேவையற்ற பயணங்கள் உங்களுக்கும், மற்றவர்களுக்கும் உதவாது

நாளை சுய ஊரடங்கின்போது வீட்டில் இருப்பது மட்டுமல்ல, உங்களது நகரத்திலும் இருப்பது அவசியம். நாளை தேவையற்ற பயணங்கள் உதவாது என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்