தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் 2-ம் கட்டத்தில் உள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் பேட்டி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் 2-ம் கட்டத்தில் உள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் கூறினார்.

Update: 2020-03-28 22:30 GMT
சென்னை, 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தின் வளாகத்தில் நேற்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது 2-ம் கட்டத்தில் இருக்கிறது. தமிழகத்தில் இன்று (அதாவது நேற்று) 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தஞ்சாவூர் மற்றும் வேலூர் அரசு மருத்துவமனைகளில் உள்ளவர்கள் வெளிநாடு சென்று வந்துள்ளனர். மேலும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 60 வயது நபர் வெளிநாடு செல்லவில்லை. ஆனால் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுடன் அவர் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 1,500 ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது. அதில் 67 பேரின் ரத்த மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை. மேலும் 1,392 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் உள்ளோரில் 45 ஆயிரத்து 537 பேரின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 10 மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. இந்த 10 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் கட்டுப்பாட்டு திட்டம் செயல்படுத்த ஆலோசனை வழங்கி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்