தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 309 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 309 ஆக உயர்ந்து உள்ளது.

Update: 2020-04-02 13:09 GMT
சென்னை,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.  தமிழகத்தில் கடந்த மார்ச் 30ந்தேதி வரை 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.  இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கூடுதலாக 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, டெல்லி மாநாட்டுக்கு சென்று விட்டு திரும்பியவர்களிடம் நடந்த கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய பரிசோதனையில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் தெரிவித்தது.  இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 124 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, கொரோனா பாதித்தவர்களில் வீட்டு கண்காணிப்பில் 77,330 பேர் உள்ளனர்.  அரசின் முகாம்களில் 81 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும்.

டெல்லி நிஜாமுதீனில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 1,103 பேர் அவர்களாகவே முன்வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.  அவர்களில் 658 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளன.  மீதமுள்ளவர்களுக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  அவர்களுக்கு நாளை (ஏப்ரல் 2ந்தேதி) பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 19 மாவட்டங்களை சேர்ந்த 190 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இவர்களில் தமிழகத்தினை சேர்ந்த 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து அவர், 1,103 பேர் இருந்த இடங்களை சுற்றியுள்ள பகுதிகளை தனிமைப்படுத்தவும், அந்த பகுதியில் வசிப்போரை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.  கொரோனா பாதிப்பு உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அவர்களாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 264 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1,103 பேருக்கும் பரிசோதனை நடந்து உள்ளது.  இதில், தமிழகத்தில் இன்று 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதுவரை வீட்டு கண்காணிப்பில் 86,342 பேர், அரசின் கண்காணிப்பில் 90 பேர் உள்ளனர் என கூறினார்.

இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 234ல் இருந்து 309 ஆக உயர்ந்து உள்ளது.

மேலும் செய்திகள்