தமிழகத்திற்கு இடம் பெயர்ந்து வந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு - ரூ.8½ கோடி ஒதுக்கீடு

தமிழகத்திற்கு இடம் பெயர்ந்து வந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு வழங்க ரூ.8½ கோடி ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2020-04-05 20:29 GMT
சென்னை, 

தமிழக தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நசிமுதீன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் வெளி மாநிலத்திலிருந்து ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 569 தொழிலாளர்கள் இடம் பெயர்ந்து வந்து பணியாற்றுகின்றனர். இவர்களில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 336 பேர் தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனர். மற்றவர்கள் ஓட்டல்கள், கடைகள் மற்றும் வேளாண்மை தொடர்பான தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில், தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவினால் இவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியவில்லை. வேலைக்கும் செல்ல முடியாத நிலையில் உள்ள இவர்களுக்கு உணவு மற்றும் இருப்பிடம் வழங்குவது அவசியமாக உள்ளது. 

எனவே ஒவ்வொருவருக்கும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ எண்ணெய் அடங்கிய ஒரு பை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு செலவாகும் தொகை ரூ.8 கோடியே 51 லட்சத்தை முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதியில் இருந்து அனுமதிக்க உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்