கொரோனா தொற்றுள்ளவருடன் தொடர்பில் உள்ளவர்கள் பட்டியலை போலீசார் தயாரிக்கும் முறை

கொரோனா தொற்றுள்ளவருடன் தொடர்பில் இருந்தவர் எங்கெல்லாம் சென்றார்? யாருடன் அவர் தொடர்பு வைத்திருந்தார் என்பதை கண்டறிந்து, சங்கிலித் தொடர் போல் அடுத்த கட்ட பட்டியலை போலீசார் தயாரிப்பார்கள்

Update: 2020-04-07 02:35 GMT
படம்: PTI
சென்னை

கொரோனா வைரஸ் தொற்று ஒருவரது உடலிலிருந்து தும்மல், இருமல் மூலம் மற்றவர்களுக்கு பரவுகிறது. கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை தனிமை படுத்தவேண்டும் அதேபோல், அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டுபிடித்து தனிமைப்படுத்தினால்தான் சமூக பரவலை தடுக்க முடியும். 

 இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வழிகாட்டுதல்கள் கொரோனா பரிசோதனையை சில வகைகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்துகின்றன. அவை - சர்வதேச பயண வரலாற்றைக் கொண்டவர்கள் மற்றும் அறிகுறிகளாக இருப்பவர்கள், உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்புகளுடன் தொடர்பு வரலாற்றைக் கொண்டவர்கள் மற்றும் வைரஸின் அறிகுறிகளைக் கொண்டவர்கள், அறிகுறி உள்ள சுகாதாரப் பணியாளர்கள், கடுமையான  சுவாச நோய்  மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் ஒரு உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்பின் நேரடி அல்லது உயர்-ஆபத்து தொடர்பு உடையவர்கள் ஆவார்கள்
அப்படி, தமிழகத்தில், சுகாதாரத்துறை, போலீசாருடன் இணைந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை பட்டியலிட்டு, தனிமைப்படுத்தி வருகின்றனர்.

கொரோனா தொற்று உறுதியான நபர் சொல்லும் தகவல்களின் அடிப்படையில் அவர் எங்கெல்லாம் சென்றுவந்தார், யாரையெல்லாம் சந்தித்தார் என்பதை சுகாதாரத் துறை அதிகாரிகள் வரைபடமாக தயார் செய்வார்கள். பின்னர் சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, விசாரணை நடத்தப்படுகிறது

உளவுத்துறை விசாரணையைத் தாண்டி, அறிவியல் பூர்வமான விசாரணையையும் போலீசார் மேற்கொள்கின்றனர். நோய்த்தொற்று உறுதியானவரின் செல்போன் எண்ணைக் கொண்டு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து கடைசி 10 நாட்களின் அழைப்பு விவரங்கள், இருப்பிட விவரங்களை போலீசார் சேகரிப்பார்கள்

அதன் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர் சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் சொன்னது சரியா என்பதை சரி பார்ப்பார்கள். உதாரணத்திற்கு, தொற்றுள்ளவர், வங்கி, மருந்துக்கடைக்குச் சென்றது செல்போன் இருப்பிட ஆய்வில் தெரியவந்தால், அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும்

பிறகு சம்பந்தப்பட்ட வங்கி, மருந்துக்கடையை மூட சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்கும், அதேபோல், தொற்றுள்ளவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள்பின்னர், தொற்றுள்ளவருடன் தொடர்பில் இருந்தவர் எங்கெல்லாம் சென்றார்? யாருடன் அவர் தொடர்பு வைத்திருந்தார் என்பதை கண்டறிந்து சங்கிலித் தொடர் போல் அடுத்த கட்ட பட்டியலை போலீசார் தயாரிப்பார்கள்.

வெளிநாடு, வெளியூரில் இருந்து அறிகுறியுடன் வந்தவர்கள் சென்றுவந்த கடை, வங்கி மற்றும் அவர் பயன்படுத்திய வாகனம் என அவரது நகர்வு சங்கிலி முழுவதும் கண்டுபிடிக்கப்படுகிறது.  இதில் தமிழக காவல்துறையின் தரவுகளின் படி, இதுவரை சுமார் 1 லட்சம் பேரின் அழைப்பு, இருப்பிட விவரங்கள் சேகரிக்கப்பட்டு சுகாதாரத் துறைக்கு உதவியது தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட நபரின் நகர்வுகளை உறுதி செய்ய சாலையோரம், கடைகள், வங்கிகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் உதவியாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொற்றுள்ளவரின் தொடர்புகளை ஒன்றுவிடாமல் சேகரிக்க இரண்டு விதமான புதிய தொழில்நுட்பத்தை போலீசார் அமல்படுத்தி வருகின்றனர்.

ஒன்று, ஃபேஸ் செக்கிங் முறை, அதாவது, தொற்றுள்ளவரின் புகைப்படத்தைக் கொண்டு, சுற்றுவட்டாரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளுடன் ஒப்பிட்டு உறுதிப்படுத்துதல்.

இரண்டாவது, அதிக எண்ணிக்கையில் தொற்று பதிவாகியுள்ள ஏரியாவில், தெர்மல் கேமராக்களை போலீசார் பொருத்தியுள்ளனர்.  அப்பகுதி மக்கள் அந்த கேமராக்களை கடந்து செல்லும்போது அவர்களது உடல் வெப்பநிலையை கண்காணிக்கும்

100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை இருந்தால் அந்தநபரை அடையாளம் காட்டி பதிவு செய்து எச்சரிக்கை விடுக்கும்

தொற்றுள்ளவர்கள் கொடுக்கும் தகவல், மறைக்கும் தகவல் என்பதைத் தாண்டி அறிவியல் பூர்வமான முறையில் தமிழக போலீசார் இந்த தொடர்புகள்  அறிதல் (கான்டாக்ட் டிரேசிங்) என்ற பின்னணி ஆராய்ச்சியை மேற்கொள்கிறார்கள்.

மேலும் செய்திகள்