பணியில் இருந்து ஓய்வு பெறும் டாக்டர்கள், நர்சுகளுக்கு 2 மாதம் தற்காலிக பணி நியமனம் - எடப்பாடி பழனிசாமி உத்தரவு

இம்மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்த டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்களுக்கு 2 மாதம் ஒப்பந்த முறையில் தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-04-25 23:30 GMT
சென்னை, 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. அரசு,கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, 1,508 லேப்டெக்னீசியன்கள், 530 டாக்டர்கள் மற்றும் 1,000 நர்சுகள் தெரிவு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

மேலும், கடந்த 31-ந் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்ற டாக்டர், நர்சு மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோருக்கு ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமனம் வழங்கப்பட்டு பணியாற்றி வருகின்றார்கள்.

அதேபோன்று, வருகிற 30-ந் தேதி பணியில் இருந்து ஓய்வு பெறவுள்ள டாக்டர், நர்சு மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோருக்கும் ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். 

இதனைத் தொடர்ந்து தற்போது 1,323 நர்சுகள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பணியாளர்கள் ஆணை கிடைக்கப் பெற்றவுடன் உடனடியாக பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்