ஊரடங்கில் வீட்டில் இருக்கும் அரசு ஊழியர்கள் சம்பளத்தை குறைக்க கோரிய வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு

ஊரடங்கில் வீட்டில் இருக்கும் அரசு ஊழியர்கள் சம்பளத்தை குறைக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-04-28 20:00 GMT
சென்னை,

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் அம்சா கண்ணன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. 

இதனால் அரசு ஊழியர்கள் பலர் வேலைக்கு செல்லவில்லை. அதனால், அவர்களுக்கு முழு ஊதியம் வழங்குவது என்பது அரசுக்கு மிகப்பெரிய வீண் செலவாகும். தெலுங்கானா, உத்தரபிரதேசம், ஒடிசா உள்ளிட்ட சில மாநில அரசுகள், ஊரடங்கின் காரணமாக அரசு ஊழியர்களின் ஊதியத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை குறைத்து கொடுத்துள்ளது.

எனவே, அரசு ஊழியர்களுக்கு முழு ஊதியத்தை வழங்குவதற்கு பதில் குறிப்பிட்ட சதவீதம் குறைத்து கொடுக்க வேண்டும் என்று கடந்த 8-ந்தேதி தமிழக தலைமை செயலாளருக்கு மனு அனுப்பினேன். 

இதுவரை பரிசலிக்கப்படவில்லை’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர், ‘அரசு ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்குவது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவாகும். அதில் ஐகோர்ட்டு தலையிட முடியாது. வழக்கை தள்ளுபடி செய்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்