பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால்தான் கொரோனாவை தடுக்கலாம் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

கொரோனாவை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால்தான் அதன் பரவலைத் தடுக்கலாம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-04-29 00:00 GMT
சென்னை, 

தமிழ்நாட்டில் கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள 12 குழு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. அதைத் தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பேசியதாவது:-

காவல்துறையைப் பொறுத்தவரைக்கும், அவர்களது பணி கடுமையான மற்றும் சவாலான பணி. இரவென்றும், பகலென்றும் பாராமல் பணியாற்றிக் கொண்டிருக்கிற துறை காவல்துறை. தற்போது ஒருமாதத்திற்கும் மேலாகிவிட்டது. ஒரே நபரை வைத்துக் கொண்டிருந்தால் நிச்சயமாக பணிச்சுமை ஏற்பட்டு சிரமம் ஏற்படும். எனவே, சுழற்சி முறையில் காவலர்கள் பணியாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவும், காவல்துறையைச் சார்ந்த 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலகுவான பணியைக் கொடுக்கவேண்டும்.

சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற பெரிய மாநகராட்சிகளில் காய்கறி மார்கெட்டில்தான் பிரச்சினையே. மக்களுக்கு எவ்வளவுதான் நாம் எடுத்துச் சொன்னாலும், மக்கள் அதை பின்பற்ற மறுக்கிறார்கள், இதை விளையாட்டுத்தனமாக நினைக்கிறார்கள். இந்த நோயின் வலிமை, தீவிரம், தாக்கம் போன்றவைகளை புரிந்து கொள்வதில்லை.

அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கொத்துக் கொத்தாக மக்கள் இறக்கக்கூடிய சூழ்நிலையை தொலைக்காட்சியில் மக்கள் பார்க்கிறார்கள். அங்கிருக்கும் மக்களும் இதை முதலில் உணரவில்லை. பிறகு அங்கு அதிகமான உயிர் பலி ஏற்படுகின்ற காரணத்தினால், அரசு சொல்கின்ற வழிமுறைகளை பின்பற்றியதன் பலனாக அங்கு இறப்பு குறைந்திருக்கிறது. இத்தாலியிலும், ஸ்பெயினிலும் அந்தநோய் குறைக்கப்பட்டிருக்கிறது.

இப்போது அங்கு ஊரடங்கு தளர்த்தப்படும் என்ற செய்தியையெல்லாம் நாம் பார்க்கிறோம். நமக்கு இது ஆரம்பகாலக் கட்டம். இந்த ஆரம்பக்காலக் கட்டத்திலேயே இதற்கு தகுந்த நடவடிக்கையை எடுக்கிறபோது, பொதுமக்களும் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தால் இந்த நோய்பரவலை எளிதாக தடுக்கலாம்.

இல்லாவிட்டால், உலகநாடுகள் முழுவதிலும் கட்டுப்படுத்தப்பட்டாலும்கூட, நம் பகுதியில் கட்டுப்படுத்தமுடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிடும். நமது காவல்துறையும், உள்ளாட்சித் துறையும் வாகனங்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்தி வீதி வீதியாக பிரசாரம் செய்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

சமுதாய இடைவெளியை பின்பற்றுவது, மக்கள் அதிகமாக கூடுகின்ற பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்ப்பது, சுத்தமாக இருப்பது போன்றவற்றை கடைபிடித்த காரணத்தினால் சீனா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் இன்றைக்கு ஊரடங்கு தளர்வு ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் நம்முடைய பகுதியில் அதை பின்பற்றாத காரணத்தினாலே இன்றைக்கு அந்த நோயினுடைய எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்