இ-பாஸ் வழங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு அதிகாரிகள் நியமனம் - தமிழக அரசு உத்தரவு

இ-பாஸ் வழங்கும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள பணிகளை கவனிக்க அதிகாரிகளை அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-05-06 20:09 GMT
சென்னை, 

தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் சிக்கித் தவிக்கும் வெளிமாநிலத்து பயணிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பலர் அவர்களின் மாநிலங்களுக்குத் திரும்புவதற்காக எளிதான நடைமுறையை அரசு வகுத்தளித்துள்ளது.

இதற்கான ஆன்லைன் அனுமதிச்சீட்டு பெற இணையதளம் மற்றும் பதிவு வசதிகளை அரசு அளித்துள்ளது. தமிழகத்தில் சிக்கித் தவிப்பவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை கண்காணிக்கவும், இ-பாஸ் வழங்குவதில் எழும் பிரச்சினைகளை கவனிப்பதற்காவும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இந்த பாஸ் வழங்கும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள பணிகளை கவனிக்க 3 அதிகாரிகளை அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சிறப்புச் செயலாளர் பிங்கி ஜோவெல், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. பொதுமேலாளர் ஆனந்தகுமார், தமிழ்நாடு பைபர்நெட் கழக பொதுமேலாளர் சாந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உடனே தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆணையரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்