இந்த ஆண்டு கண்காட்சிகள் நடத்த முடியாது: தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் - தென்னிந்திய கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள்

இந்த ஆண்டு கண்காட்சிகள் நடத்த முடியாததால் தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று தென்னிந்திய கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2020-05-11 21:15 GMT
சென்னை, 

தென்னிந்திய கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் இ.உதயகுமார், துணைத்தலைவர் டி.கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் 2-ம் நிலை நகரங்களில் ஆண்டுக்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா வைரசால் கடந்த 2 மாதங்களாக கண்காட்சிகள் ஒருங்கிணைப்பு தொழிலும், அதனால் மக்கள் கண்காட்சிகளை பயன்படுத்தி கொள்வதும் முற்றிலும் தடைப்பட்டு உள்ளது.

இதனால் இந்த தொழிலை நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான அரங்கு உரிமையாளர்கள், கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து, வருமானம் இன்றி வாடுகின்றனர். தற்போது நாட்டில் சமூக இடைவெளியை கட்டாயம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய சூழல் இருப்பதால், பொதுமக்களை நம்பி கண்காட்சிகள் நடத்துவது என்பது இந்த ஆண்டு இறுதி வரை இயலாத காரியம்.

எனவே இந்த தொழிலை நம்பி வாழும் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவி தொகையை அறிவிக்க வேண்டும். மேலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் ஏற்கனவே அரசின் அனுமதி பெற்று கண்காட்சியை நடத்த முடியாமல் போன ஒருங்கிணைப்பாளர்களுக்கும், கண்காட்சி பாதியில் நிறுத்தப்பட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் அதற்கான நஷ்டஈட்டை அரசு தர வேண்டும் என்று முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்