கொரோனா தடுப்பு பணிகளுக்கு லலிதா ஜூவல்லரி சார்பில் ரூ.3 கோடி நிதி உதவி எம்.கிரண்குமார் வழங்கினார்

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளுக்காக பல்வேறு தரப்பினரும் மத்திய-மாநில அரசுகளின் பொது நிவாரண நிதிக்கு நிதி உதவி செய்து வருகின்றனர்.

Update: 2020-05-19 20:28 GMT
சென்னை, 

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளுக்காக பல்வேறு தரப்பினரும் மத்திய-மாநில அரசுகளின் பொது நிவாரண நிதிக்கு நிதி உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் லலிதா ஜூவல்லரியின் சார்பில் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில அரசுகளுக்கு தலா ரூ.1 கோடி வீதம் மொத்தம் ரூ.3 கோடியை நிதி உதவியாக அந்த நிறுவனத்தின் தலைவர் எம்.கிரண்குமார் வழங்கி இருக்கிறார்.

தமிழகத்துக்கான நிதியை தலைமை செயலாளர் க.சண்முகத்திடம் நேரில் சென்று கிரண்குமார் வழங்கியுள்ளார். இதுதொடர்பாக கிரண்குமார் கூறுகையில், ‘மக்களின் ஆதரவிலும், அரசின் ஆதரவிலும்தான் நாங்கள் இவ்வளவு தூரம் வளர்ந்துள்ளோம். கொரோனா இடர்பாடை அனைவரும் சந்திக்கும் இவ்வேளையில் என்னால் இயன்ற உதவியை செய்வதை என் கடமையாக நினைக்கிறேன். இயன்ற உதவிகளை தொடர்ந்து செய்வேன். அரசின் பாதுகாப்பு பணிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பேரிடர்கள் நமக்கு புதிதல்ல. இதுவும் கடந்து போகும். நாம் வெற்றி பெறுவோம்’ என்றார்.

ஊரடங்கு முடிந்து நகைக்கடைகள் திறக்கப்படும்போது, “நகைவாங்கும் வாடிக்கையாளர்களின் நலன்கருதி எங்கள் ஷோரூம் மற்றும் சுற்றியுள்ள மொத்த வளாகமும் கிருமிநாசினி கொண்டு தொடர்ந்து சுத்தம்செய்யப்படும் என்றும், ஷோரூமுக்குள் வாடிக்கையாளர்கள் நுழையும்போது, கைகளை தூய்மைப்படுத்திக்கொள்ள கிருமிநாசினி திரவமும், முக கவசம் இல்லையென்றால் அதுவும் வழங்கப்படும் என்றும், பணியாளர்கள் அனைவருக்கும் தூய்மையை பாதுகாக்க பிரத்யேக பயிற்சி அளித்து, முக கவசமும், கையுறையும் அணிந்துதான் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வார்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்