தமிழக அரசின் ஒப்புதலுக்கு மத்திய அரசு காத்திருப்பு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்குமா? அமைச்சர் பதில்

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்குமா? என்பதற்கு அமைச்சர் பதில் அளித்தார்.

Update: 2020-05-21 21:30 GMT
சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சமீபத்தில் மத்திய அரசு உயர்கல்வி சிறப்பு நிறுவனம் (இன்ஸ்டிடியூட் ஆப் எமினன்ஸ்) என்ற சிறப்பு அந்தஸ்தை வழங்கியது. அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கான ஒப்புதல் கடிதத்தை மாநில அரசு வழங்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே பின்பற்றப்பட்டுவரும் 69 சதவீத இடஒதுக்கீடு முறையை தொடர்ந்து பின்பற்றுவது குறித்து உறுதியளிக்க வேண்டும் என்று மாநில அரசு வலியுறுத்தியதால், அந்தஸ்துக்கான ஒப்புதல் கடிதத்தை வழங்கவில்லை. இதற்கான அவகாசத்தையும் மத்திய அரசு வழங்கி இருக்கிறது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கான சிறப்பு அந்தஸ்துக்கு ஒப்புதல் கடிதம் வழங்குவது தொடர்பாக, அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், தங்கமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் மற்றும், நிதி, சட்டம் மற்றும் உயர்கல்வித் துறை செயலாளர்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்தது. இந்த குழு இதுவரை 2 முறை கூடி ஆலோசித்து உள்ள நிலையில், சிறப்பு அந்தஸ்துக்கான ஒப்புதல் கடிதத்தை வருகிற 31-ந்தேதிக்குள் வழங்க அண்மையில் மத்திய அரசு கெடு விதித்தது.

இதற்கிடையில், கொரோனா ஊரடங்கால் இதற்கென்று அமைக்கப்பட்ட குழுவினர் ஆலோசனை நடத்த முடியாமல் போனது. இந்த நிலையில் இதுதொடர்பாக அமைக்கப்பட்ட குழுவினர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்தித்து பேசினர். அப்போது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் உடன் இருந்தார். அப்போது பல்வேறு கருத்துகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், ‘இதுதொடர்பாக அமைக்கப்பட்ட குழு தான் முடிவு எடுக்க வேண்டும். ஆனால் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வுக்கு நாங்கள் தயார்நிலையில் உள்ளோம். கல்லூரிகள் திறப்பு குறித்தும் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கொரோனா வார்டாக கல்லூரிகள் மாற்றப்பட்டுள்ளன. அதனை எல்லாம் சரிசெய்தபிறகு தான், முடிவு எடுக்கப்படும். சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகாலம் வருகிற 27-ந்தேதியுடன் முடிவடைந்தவுடன், கல்லூரி நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஒருங்கிணைப்பு குழு ஒன்று அமைக்கப்படும். அவர்கள் துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை பணிகளை மேற்கொள்வார்கள்’ என்றார்.

மேலும் செய்திகள்