34 வருட அனுபவத்தை ஊரடங்கு சாய்த்தது பூ வியாபாரியாக மாறிய சமையல் தொழிலாளி

34 வருட அனுபவம் கொண்ட சமையல் தொழிலாளி தற்போது ஊரடங்கு காரணமாக சாலையோரம் பூ வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Update: 2020-05-21 22:15 GMT
சென்னை,

34 வருட அனுபவம் கொண்ட சமையல் தொழிலாளி தற்போது ஊரடங்கு காரணமாக சாலையோரம் பூ வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ‘காலத்துக்கேற்ப மாறுவதே நல்லது’ என்கிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 3-ம் கட்ட ஊரடங்கு முடிவடைந்து, 4-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது. முக்கியமாக தொழிலாளிகளின் வாழ்க்கையை கொரோனா புரட்டி போட்டுள்ளது என்றே சொல்லலாம். வாழ்வாதாரம் இழந்த எத்தனையோ தொழிலாளர்கள் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றபடி தங்கள் வாழ்க்கையை அமைத்து கொண்டதையும் பார்க்க முடிகிறது.

உதாரணத்துக்கு ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்கள் இப்போதைய நிலையில் காய்கறி, பழங்கள் விற்பதை பார்க்க முடிகிறது. அழகு நிலையங்களில் பணிபுரிந்த இளம்பெண்களும் வீதிக்கு வந்து காய்கறியை கூவி கூவி விற்கிறார்கள். இப்படி பல வகைகளில் ஊரடங்கு காரணமாக தங்களின் இயல்பு வாழ்க்கையை மறந்து காலத்துக்கு ஏற்றபடி மாறியுள்ளதை பார்க்க முடிகிறது. அந்தவகையில் ஊரடங்கால் தனது 34 வருட அனுபவத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு பூ வியாபாரியாக மாறியிருக்கிறார், ஒரு சமையல் தொழிலாளி.

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் சிறு வயதில் இருந்தே சமையல் தொழிலில் ஈடுபட்டு வந்தார். வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சென்று திருமணம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு உணவு சமைத்து இருக்கிறார். ஓடி ஓடி உணவு பரிமாறியும் இருக்கிறார். முகூர்த்த நாட்கள் வந்தால் போதும் வீட்டிலேயே தங்கமாட்டார். அந்தளவுக்கு பரபரப்பாக வலம் வந்த ராஜேந்திரன், ஊரடங்கு காரணமாக முடங்கிவிட்டார்.

திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் அதிக நபர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சமையல் ஆர்டர்கள் இல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு 2 மாதங்களுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்து வந்தார். பின்னர் ஒருகட்டத்தில் சும்மா இருந்தால் எதுவும் நடக்கபோவதில்லை, வாழ்க்கை ஓட்டத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வதே புத்திசாலித்தனம் எனும் ரீதியில் தனது உறவினர்களைபோல பூ கட்டும் தொழிலிலேயே ஈடுபட முடிவெடுத்தார். அதன்படி தனது 34 வருட அனுபவத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு, மயிலாப்பூர் மாட வீதியில் சாலையோரம் பூ கட்டும் தொழிலில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருமானம் ஈட்டி வருகிறார், ராஜேந்திரன்.

இதுகுறித்து ராஜேந்திரன் கூறியதாவது:-

ஊரடங்கால் என்னை போல ஏராளமான சமையல் தொழிலாளர்கள் வீதிக்கு வந்துள்ளனர். கையில் காசில்லாமல் கவலையில் சுற்றித் திரிவதை விட தெரிந்த தொழிலில் ஈடுபட்டு ஓரளவு வருமானம் ஈட்டலாம் என்று முடிவெடுத்தேன். எனது உறவினர்கள் சாலையோரம் பூ கட்டி விற்பனையில் ஈடுபடுகிறார்கள். நானும் அவர்களுடன் இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். தினமும் ரூ.200 வரை வருமானம் கிடைக்கிறது. சில நேரம் வருமானம் இல்லாமலும் போகிறது. அப்போதைய நேரங்களில் கட்டிய பூக்களை அருகில் சாலையோரம் உள்ள கோவிலில் வைத்துவிடுவேன். இல்லையெனில் குறைந்த விலைக்கு வாடிக்கையாளர்களுக்கே அதை வழங்கிவிடுவேன். சில நேரம் இலவசமாகவே கொடுத்துவிடுவேன். என்னை பொறுத்தவரை கால ஓட்டத்துக்கேற்ப மாறுவதே நல்லது. அதன்படியே இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். இதில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. ஊரடங்கு நிறைவடைந்து நிலைமை சீராகி எனது பழைய தொழில் கைகொடுக்கும் வரை இத்தொழிலில் ஈடுபட முடிவு எடுத்திருக்கிறேன். வருமானம் இல்லாமல் வீட்டிலேயே இருப்பதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை தானே...

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்