61 நாட்களுக்கு பிறகு சென்னையில் இருந்து 22 நகரங்களுக்கு விமான சேவை 25-ந் தேதி தொடங்குகிறது

கொரோனா ஊரடங்கால் 61 நாட்களுக்கு பின்னர் சென்னையில் இருந்து 22 நகரங்களுக்கு வருகிற 25-ந்தேதி முதல் விமான சேவை தொடங்குகிறது.

Update: 2020-05-22 18:57 GMT
ஆலந்தூர்,

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் விமான சேவை நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் சுமார் 61 நாட்கள் கழித்து வருகிற 25-ந் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதற்காக 7 வகையான கட்டணங்கள் கொண்ட விமான சேவையை அறிவித்து உள்ளது.

அதன்படி சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து 22 நகரங்களுக்கு இடையே விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இதற் கான ஏற்பாடுகளை சென்னை விமான நிலைய ஆணையகம் செய்து வருகிறது.

கட்டணங்கள் அடிப்படையில் நகரங்களுக்கு செல்லும் விமானங்களின் விவரம் வருமாறு:-

ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரம் வரை கட்டணத்தில் செல்லும் நகரங்கள் பெங்களூரு, கோவை.

ரூ.2,500-ல் இருந்து ரூ.7,500 வரை செல்லும் நகரங்கள் ஐதராபாத், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், கொச்சி, மங்களூரு, கோழிக்கோடு.

ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.9 ஆயிரம் வரை செல்லும் நகரங்கள் புவனேசுவர், கோழிக்கோடு, கோவா, கொச்சி, கொல்கத்தா, நாக்பூர், அந்தமான், புனே, ஐதராபாத்.

ரூ.3,500-ல் இருந்து ரூ.10 ஆயிரம் வரை செல்லும் நகரங்கள் இந்தூர், மும்பை, ராய்ப்பூர், கொல்கத்தா, அந்தமான்.

ரூ.4,500-ல் இருந்து ரூ.13 ஆயிரம் வரை செல்லும் நகரங்கள் டெல்லி, ஜெய்ப்பூர், லக்னோ, மங்களூரு, பாட்னா, வாரணாசி.

ரூ.5,500-ல் இருந்து ரூ.15,700 வரை செல்லும் நகரங்கள் கவுகாத்தி, வாரணாசி.

மேலும் விமான பயணிகளுக்கான விதிமுறைகளையும் விமான ஆணையகம் வெளியிட்டு உள்ளது.

ஆனால் தமிழகத்தில் வருகிற 31-ந் தேதி வரை விமானம், ரெயில் சேவைகளை இயக்க வேண்டாம் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் சென்னையில் விமான சேவை தொடங்குமா? என்பது பற்றி விரைவில் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்