ஊரடங்கு 31-ந்தேதி முடிவடையும் நிலையில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

ஊரடங்கு 31-ந்தேதி முடிவடையும் நிலையில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

Update: 2020-05-27 00:00 GMT
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா தொற்றின் நிலை பற்றியும், அதன் அடிப்படையில் அரசு எடுக்க வேண்டிய முடிவுகள் பற்றியும் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு ஆராய்ந்து அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை வழங்கி வருகிறது. இந்த குழுவுடன் ஏற்கனவே 3 முறை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளார்.

இதற்கிடையே ஊரடங்கால் இழந்த பொருளாதாரம், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் தமிழக அரசு படிப்படியாக பல்வேறு தளர்வுகளை தொடர்ச்சியாக அறிவித்து வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட 4-ம் கட்ட ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந்தேதியுடன் நிறைவடைய உள்ளது.

இந்தநிலையில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் 4-வது முறையாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். காலை 11.30 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் பிற்பகல் 12.30 மணி வரை ஒரு மணி நேரம் நடந்தது. இதில், மருத்துவ பரிசோதனைகள் தொடர்பாக செயல்படுத்தப்படவேண்டிய உத்திகள், மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்த வழிமுறைகள், இறப்புகளை முற்றிலுமாக தவிர்க்க மேற்கொள்ளப்படவேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதேபோல நோய் தொற்றால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களை கண்டறிந்து அவர்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், தமிழகத்தில் குறிப்பாக பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த வழிமுறைகளை கடைபிடித்து தமிழகத்தில் குறிப்பாக, பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

மருத்துவ நிபுணர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் தலைமைச்செயலாளர் க.சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் துணை தலைவர் டாக்டர் பிரதீப் கவுர், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயண பாபு உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மருத்துவ நிபுணர்கள் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பரிந்துரைகள் குறித்து தமிழக அரசு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிடும் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்