ஜெயலலிதா இல்லம் தொடர்பான அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு கவர்னரிடம் முறையிடுவேன் -ஜெ.தீபா பேட்டி

ஜெயலலிதா இல்லம் தொடர்பான அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக கவர்னரிடம் முறையிடுவேன் என்று ஜெ.தீபா கூறினார்.

Update: 2020-05-29 23:00 GMT
சென்னை, 

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

என்னை நேரடி வாரிசு என்று அறிவித்த பிறகு, எனக்கு சில கடமைகள் இருக்கிறது. போயஸ்கார்டன் இல்லத்துக்கு வந்தாலே நிறைய பிரச்சினை செய்வோம் என்று எச்சரிக்கிறார்கள். நீதியை தலைவணங்கி அ.தி.மு.க.வின் தலைவர்களும், எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். நியாயம் நிலைநாட்டப்பட்டு இருக்கிறது. அதைவிட்டுவிட்டு என்னை மிரட்டுகிறார்கள்.

இப்போது இருக்கும் அசாதாரண சூழலில் போயஸ்கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு அவசர சட்டம் ஏன் பிறப்பிக்கவேண்டும்?. இப்போது செய்ய வேண்டிய அவசியம் வந்தது என்ன?. சட்டரீதியாக என்ன செய்ய வேண்டுமோ? அதை செய்வேன். இந்த அ.தி.மு.க. அரசாங்கம் என்னை போயஸ்கார்டன் இல்லத்துக்கோ?, அந்த சாலைக்கோ? வரக்கூடாது என்று சொல்வது நியாயம் இல்லை. தமிழக கவர்னர் எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். ஆறுமுகசாமி ஆணையத்துக்கு நான் சென்று விளக்கம் அளித்தேன். அ.தி.மு.க. சார்பில் யாராவது அங்கு வந்து இருக்கிறார்களா?. சட்டத்துக்கு முன் யாரும் தப்பிக்க முடியாது.

நேரடி வாரிசு என்று கோர்ட்டு அறிவித்துவிட்டது. இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே, போயஸ்கார்டன் இல்லத்தை கேட்டு விடக்கூடாது என்பதற்காக தான் அவசரம், அவசரமாக சட்டத்தை இயற்றினார்கள். இதுகுறித்து கவர்னரிடம் முறையிட்டு, அவசர சட்டத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன்.

ஜெயலலிதா இருந்தவரை அங்கு வரக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் இப்போது அ.தி.மு.க. அரசாங்கத்தின் அணுகுமுறை சரியில்லை.

நேரடி வாரிசு என்று அறிவிக்கப்பட்ட பிறகு, போயஸ்கார்டன் இல்லத்தை மட்டும் அல்ல. அனைத்து சொத்துகளையும் ஒப்படைக்கவேண்டும். ஒரு அறக்கட்டளை ஆரம்பித்து அதன்கீழ் இவற்றையெல்லாம் கொண்டுவந்து, நிர்வகிக்கவேண்டும். இதற்கு சட்டரீதியான முயற்சிகள் அதிகம் எடுக்கவேண்டி இருக்கிறது.

ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதற்கு எந்த தொண்டனுக்கும் விருப்பம் இல்லை. நான் எடுத்த ‘சர்வே’யில் 80 சதவீதம் பேர் வேண்டாம் என்று தான் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது அவரது கணவர் மாதவன், வக்கீல் தொண்டன் சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்