மதுரை மாணவி நேத்ராவை ஐநா கவுரவப்படுத்தியது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாணவி நேத்ராவை ஐநா கவுரவப்படுத்தியது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார்.

Update: 2020-06-05 06:56 GMT
மதுரை:

மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து பலர் உதவி செய்து வருகின்றனர்.

மதுரையில் மேலமடையில் வசித்து வருபவர் மோகன். 47 வயதான மோகன், சலூன் நடத்தி வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறார். இதற்காக தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்த 5 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார்.

மோகனின் மகள் நேத்ரா, தற்போது ஒன்பதாவது வகுப்பு படித்து வருகிறார். ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார். 

இக்கட்டான நிலையில் மக்களுக்கு மோகன் உதவிய சம்பவம் பிரதமர் மோடிக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது மகள் படிப்புக்காக வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தில் மக்களுக்கு உதவிய மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்நிலையில் ஐ.நா.நல்லெண்ண தூதராக மதுரை சலூன்கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வாகியுள்ளார்.  மேலும் நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தில் பேசவும் நேத்ராவுக்கு ஐ.நா.அழைப்பு விடுத்துள்ளது.  

தனது எதிர்கால கல்விக்காக சேமித்து வைத்திருந்த 5 லட்ச ரூபாயை ஏழைகளுக்காக நேத்ரா வழங்கியதை பாராட்டி கவுரவிக்கும் வகையில் இந்த சிறப்பு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

முடி திருத்தும் தொழிலாளி மோகன் மகள் நேத்ராவுக்கு 1 லட்சம் ஊக்க தொகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

"உலகத்திலேயே வறுமை இருக்க கூடாது என ஐ.நா.வின் நல்லெண்ண தூதரான மதுரை மாணவி நேத்ரா கூறி உள்ளார்.

மதுரை சிறுமி நேத்ராவை ஐநா கவுரவப்படுத்தியது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்