கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதால் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லையெனில் கொரோனா பரவலை தடுப்பது சாத்தியமாகாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2020-06-07 13:03 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஜூன் மாதம் கடந்த 6 நாட்களுக்குள் 7 ஆயிரத்து 819 பேர் கொரோனா பிடியில் சிக்கி உள்ளனர். இதில் 60 வயதுக்கு மேற்பட்ட 1,077 முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு உயிர் பலியும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு உயிரிழப்பு எண்ணிக்கை 251 ஆக அதிகரித்து உள்ளது.

இந்நிலையில்  சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 6 மணிக்கு தமிழகத்தில் அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கொரோனா வைரஸ் இயல்பு வாழ்க்கையும் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த ஐயமும் இல்லை. பொதுமுடக்கம்  அறிவிக்கப்பட்ட போதிலிருந்து வீட்டிலேயே இருந்து அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய மக்களுக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன்.

பல தலைமுறைகளாக பல்வேறு சவால்களை சந்தித்து வெற்றி பெற்றவர்கள் தமிழர்கள். இயற்கை சீற்றங்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வளர்ச்சி பாதையில் தமிழகத்தை அழைத்து சென்றோம். விளை பொருட்களை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளோம்.

தமிழகத்தில் கொரோனா ஆபத்து பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ஆறரை லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நோய்தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம்.

பாதிக்கப்பட்டவர்களில் 86 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை.17 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்கள், தூய்மை பணியாளர்கள் என 14 நலவாழ்வு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளோம். ஊரடங்கு காலத்தில் விவசாயம், விவசாயம் சார்ந்த பணிகளுக்கு தடை விதிக்கவில்லை.

பயிர்கடன், கூட்டுறவுக்கடன், மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பதிவுசெய்யப்படாத கைத்தறி நெசவாளர்கள், முடி திருத்துவோருக்கும் ரூ.20,000 நிதியுதவி வழங்கப்பட்டது. மொத்தமாக 35,65 லட்சம் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதால் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. பேரிடராக அறிவித்து 4,830 கோடி ரூபாய் செலவு செய்துள்ளோம்.மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களை நியமித்துள்ளோம்.

பொதுமக்கள் கூடுமானவரை தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களுக்கு வெளியே செல்லும் போது முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்.

வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் காக்க அனைவரும் கடமை உணர்ந்து செயல்பட வேண்டும்.

முகக்கவசம் அணியவேண்டும், சமூக விலகலை கடைபிடிப்போம். தேவையின்றி வெளியே செல்வதை தவிர்ப்போம்.

வெளியிடங்களுக்கு செல்லும்போது தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லையெனில் கொரோனா பரவலை தடுப்பது சாத்தியமாகாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்