சென்னையில் 3.47 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு? அமைச்சர்கள் கூட்டத்தில் தகவல்

சென்னையில் 3.47 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என அமைச்சர்கள் கூட்டத்தில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-06-08 15:36 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  அதனை கட்டுப்படுத்த அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது.  மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.  இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.  எனினும் தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  தமிழகத்தில் அதிக அளவாக சென்னை பாதிப்புக்கு இலக்காகி உள்ளது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமார், வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் உள்ளிட்ட 6 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் முக கவசங்கள் அணிந்தபடியும், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து அமர்ந்தபடியும் காணப்பட்டனர்.

இதன்பின் கூட்டத்தில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் பேசினார்.  அதில், சென்னையில் 3.47 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் இதுவரை 1.5 லட்சம் கொரோனா மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  சென்னையில் இயங்கிவரும் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் 200 ஆக அதிகரிக்கப்படும்.  2 லட்சம் பேருக்கு ஓமியோபதி மருந்து 
கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் 38 ஆயிரத்து 198 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்