4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது வதந்தி - சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது வதந்தி என்று சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-09 16:22 GMT
சென்னை,

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை தினமும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் கணிசமாக சென்னையிலேயே நோய்த் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. தேசிய அளவில் மராட்டியத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் தமிழகம் இருக்கிறது.

இந்தநிலையில், சென்னையில் பாதிப்பு அதிகம் இருக்கும் சூழலில் வரும் நாள்களில் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து சென்னையை முழுமையாகத் தனிமைப்படுத்தவும் ஆலோசனை நடந்து வருவதாகத் கூறப்பட்டது. மேலும், பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு அளிக்காததால் கொரோனா பாதிப்பு அடங்க மறுக்கிறது.

எனவே, கொரோனா பரவலை தடுக்க, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், ஒரு வாரம் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என, அரசுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்ததாக சமூகவலைதளங்களில் தகவல் காட்டு தீ போல் வேகமாக பரவியது.

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது வதந்தி என்று சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்