திருப்பரங்குன்றம் விவகாரம்; 12 பேர் மீது வழக்குப்பதிவு

திருப்பரங்குன்றம் மலைக்கு மேலே பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-12-22 07:23 IST

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம், கடந்த 3-ந் தேதி தொடங்கியது. அப்போது இருந்து மலை அடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோவிலுக்கு செல்லக்கூடிய மலைக்கு செல்லும் பாதை மற்றும் மலையின் கிழக்கு பகுதியில் உள்ள புதிய படிக்கட்டு பாதைகளில் இரும்பு தடுப்புகளால் (பேரிகாட்) மூடப்பட்டுள்ளது. மலைக்கு மேலே பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மலைமேல் உள்ள தர்காவில் வருகிற 6-ந் தேதி உருஸ் எனும் சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக நேற்று கொடியேற்றப்பட்டது. இதனையொட்டி திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் ஜீவஜோதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வழக்கமான நிலைப்பாட்டில் கொடியேற்ற அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து நேற்றுமுன்தினம் 4 முஸ்லிம்கள் தர்காவை சுத்தப்படுத்த போவதாக கூறி மலை மேல் சென்றனர். இதற்கு மலை அடிவார குடியிருப்பு பகுதியான பூர்வீக குடியிருப்பை சேர்ந்த பழனியாண்டவர் கோவில் தெரு, கோட்டைத்தெரு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக அவர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் தங்களையும் மலைக்கு மேலே செல்ல அனுமதிக்க வேண்டும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், வருவாய் அதிகாரி உத்தரவின்படி மலைக்கு மேலே செல்வதற்கு முஸ்லிம் மக்களை அனுமதிக்கிறீர்கள். ஐகோர்ட்டு உத்தரவின்படி மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்படுகிறதே? எங்களையும் மலை மேல் செல்ல அனுமதியுங்கள் என்று தொடர்ந்து வலியுறுத்தினர். இதுதொடர்பாக 12 பேர் மீது திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்