தமிழகத்தில் மதத்தால், இனத்தால் மக்களை பிளவுபடுத்த முடியாது - அமைச்சர் சேகர்பாபு

மக்களுக்கு மகிழ்ச்சி தருகின்ற திமுக ஆட்சியை யாராலும் ஏதும் செய்துவிட முடியாது என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.;

Update:2025-12-22 07:20 IST

கோப்புப்படம் 

சென்னை தீவுத்திடலில் வடசென்னை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கண்காட்சி மையத்தின் கட்டுமானப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். பின்னர், ஸ்டான்லி அரசு மருத்துவமனை சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டார். அப்போது, பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளையும், ஒப்பந்ததாரர்களையும் அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபுவிடம், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தான் நடித்த படத்தில் கோவிலுக்குள் புகுந்த ஆமையும், இந்து சமய அறநிலையத்துறையும் உருப்பட்டதாக வரலாறு இல்லை என்று கூறியிருக்கிறாரே என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 'தியேட்டர்களில் கூட வெளியிடுவதற்கு தகுதி இல்லாத படத்தில் நடித்த தகுதி இல்லாத ஒருவர்தான் நீங்கள் சொல்கின்ற பெயருக்கு உரியவர். திமுக ஆட்சியை பொறுத்தவரை எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் இனத்தால், மொழியால், மதத்தால் நாங்கள் யாரையும் பிளவுபடுத்திப் பார்ப்பதில்லை.

மதத்தால், இனத்தால், மொழியால் மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்ற அவர்களுடைய எண்ணம் தமிழகத்தில் எடுபடாது. 4 ஆயிரம் கோவில்களில் கும்பாபிஷேகம் செய்ததாலேயே இதுபோன்றவர்களின் குமுறல்களை கேட்க முடிகிறது. வியாசர்பாடியில் சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவில் ஐந்தரை அடி பள்ளத்தில் சென்றுள்ளது. தரை மட்டத்திலிருந்து அதை இடித்து கட்டுவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே, லிப்டிங் முறையில் அதை தூக்கிக் கொண்டிருக்கிறோம்.

இதேபோல, தமிழகம் முழுவதும் 24 கோவில்களை லிப்டிங் முறையில் தூக்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு மகிழ்ச்சியை தருகின்ற திமுக ஆட்சியை யாராலும் ஏதும் செய்துவிட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்