தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பரிசோதனை அதிகரிப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Update: 2020-06-10 14:00 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பிடியில் சிக்குவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்பும் உயருகிறது. குறிப்பாக இளம் வயதினர் உயிரையும் கொரோனா பறித்து வருவது அதிர்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது.  தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு இன்று ஒரேநாளில் 1927 பேர் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 326 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 34,914-ல் இருந்து 36,841 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  சேலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 16,667 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 6.38 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதில், சேலம் மருத்துவமனை சிறப்பாக செயல்படுகிறது. இதுவரை சேலம் மருத்துவமனையில் மொத்தம் 263 பேர் குணமடைந்துள்ளனர். சேலம் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு 500 படுக்கை வசதி உள்ளது. கொரோனா சிகிச்சை தமிழகத்தில் சரியான பாதையில் செல்கிறது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பில் மருத்துவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்