கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை தலைமை செயலகத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தலைமைச்செயலகத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2020-06-14 00:36 GMT
சென்னை,

கொரோனா பரவும் வேகம் தீவிரம் அடைந்து வருகிறது. தலைமைச்செயலகத்தில் பணியாற்றிய 138 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதலில், அனைத்து அரசு அலுவலகங்களும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தவேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க, மாதத்தில் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்படும். அந்த நாட்களில் அரசு அலுவலகங்கள் இயங்காது என தமிழக அரசு அறிவித்தது.

கிருமிநாசினி

அந்தவகையில் சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் உள்ள அலுவலகங்களும், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள பல்வேறு துறைகளின் அலுவலகங்களும் போலீஸ் பாதுகாப்போடு கிருமி நாசினி தெளித்து நேற்று சுத்தப்படுத்தப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகளின் மேற்பார்வையில் ஊழியர்கள் இதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

தலைமைச்செயலகத்தில் 32 துறைகளின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மக்கள் தொடர்பு அதிகாரிகள் அறைகளை தவிர மற்ற அனைத்து துறைகளின் அலுவலகங்களும் நேற்று மூடப்பட்டிருந்தன. மூடப்பட்டிருந்த அலுவலகங்களில் உள்ள கணினி, நுழைவுவாயில் கைப்பிடிகள், மேஜைகள், நாற்காலி, கோப்புகள் உள்ளிட்டவைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

வெறிச்சோடியது

இதற்கான பணியில் ஏராளமான மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். நாமக்கல் கவிஞர் மாளிகையின் வெளிப்புறத்தில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறை, அமைச்சர்கள் அறையிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

தலைமை செயலகத்தை சுத்தப்படுத்தி கிருமிநாசினி அடிக்கும் பணி நடைபெறுவதால் அங்கு பணியாற்றும் சுமார் 6 ஆயிரம் பணியாளர்களில் யாரும் நேற்று பணிக்கு வரவில்லை. இதனால் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் தலைமைச்செயலகம் நேற்று ஆள், அரவமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இன்றும்...

கிருமிநாசினி தெளிக்கும் பணி இன்று (ஞாயிற்றுக்கிழமையும்) நடைபெற உள்ளது. வரலாற்றில் முதன் முறையாக தலைமைச்செயலக ஊழியர்கள் யாரும் பணிக்கு வராமல் இழுத்து மூடப்படுவது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் தலைமைச்செயலகம் போன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம், நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களும் நேற்று மூடப்பட்டு, சுத்தப்படுத்துவதற்காக கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

மேலும் செய்திகள்