கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் 17,500 படுக்கை வசதி - எடப்பாடி பழனிசாமி தகவல்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 17 ஆயிரத்து 500 படுக்கை வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2020-06-20 23:30 GMT
சென்னை, 

சென்னை வேளச்சேரி குருநானக் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தை நேற்று பார்வையிட்ட முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

மருத்துவ நிபுணர்கள் அளிக்கின்ற வழிகாட்டுதல்களின்படி தமிழக அரசு இந்த கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் அனைவரின் கடுமையான முயற்சியின் காரணமாக, அவர்கள் சிறப்பாக பணியாற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த காரணத்தினால் தற்போது குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 54 சதவீதமாக இருக்கின்றது.

அதேபோல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கை அமல்படுத்தி, மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருப்பதற்கு உண்டான வழிவகைகளையும் ஏற்படுத்தி, அதன் மூலமாக இந்த நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டு இருக்கிறோம்.

மேலும் மாநகராட்சி மருத்துவர்களும், சுகாதாரத்துறையை சேர்ந்தவர்களும் இணைந்து, வீடு வீடாக சென்று, நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து, அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தி, நோய்த்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கும் இந்த ஊரடங்கு பயன்படுகிறது.

இந்த ஊரடங்கு காலத்தில் நோய்த்தொற்றின் அறிகுறிகளான காய்ச்சல், தொண்டை வலி, இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதற்காக காய்ச்சல் முகாம் 527 நடத்தி இருக்கிறோம். அதில் 33 ஆயிரத்து 839 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதில் 900 பேர் கண்டறியப்பட்டு 694 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதிக அளவில் இந்த நோய்த்தொற்று இருக்கின்றவர்களை கண்டறிந்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, நோய் இருக்கிறதா? இல்லையா என்பதைக் கண்டறிந்து அவர்களை குணப்படுத்துவதுதான் அரசின் கடமை. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக, மிக அவசியம். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தயவுசெய்து பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும்.

அதேபோல், எதிர்க்கட்சிகளை சேர்ந்த பலர், அரசாங்கம் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று சொல்கிறார்கள். இது ஒரு புதிய நோய். இதற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளின்படிதான் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து வழிகளிலும் அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆகவே பொதுமக்களும், அனைத்துக் கட்சியை சேர்ந்தவர்களும் இதற்கு உதவவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு மருந்தும் கண்டுபிடிக்காத சூழ்நிலையில் கூட, மருத்துவ நிபுணர்கள், உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத்துறை கொடுக்கின்ற ஆலோசனைகளின்படி நம்முடைய மருத்துவர்கள் சிகிச்சையை சிறப்பான முறையில் அளித்த காரணத்தினால்தான் 30 ஆயிரத்து 271 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.

பரிசோதனை நிலையத்தை பொறுத்தவரை இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் 83 பரிசோதனை நிலையங்கள் இருக்கின்றன. இதில் அரசு சார்பாக 45-ம், தனியார் சார்பாக 38-ம் இருக்கிறது. தனியார் மருத்துவமனையிலும் கொரோனா பரிசோதனை செய்கிறார்கள்.

சென்னையை பொறுத்தவரைக்கும் 17 ஆயிரத்து 500 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்து இருக்கிறோம். இவற்றில் 5 ஆயிரம் படுக்கை வசதிகள் மருத்துவமனைகளில் இருக்கிறது. கல்லூரிகள் போன்று பிற இடங்களில், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறோம். மொத்தம் 17 ஆயிரத்து 500 பேருக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய அளவிற்கு மருத்துவ உபகரணங்கள், படுக்கைகள் மற்றும் அனைத்து வசதிகளும் கூடிய ஏற்பாட்டை அரசு செய்து இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்