விடுதிகளில் தங்கியிருப்பவர்கள் 2 நாளில் காலி செய்ய வேண்டும்- ஐ.ஐ.டி. உத்தரவால், மாணவர்கள் கவலை

சென்னை ஐ.ஐ.டி. விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் 2 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2020-06-26 00:23 GMT
சென்னை, 

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில் சென்னை ஐ.ஐ.டி.யும் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து விடுமுறை விடப்பட்டு இருக்கிறது.

சென்னை ஐ.ஐ.டி.யில் உத்தரகாண்ட், காஷ்மீர், அருணாசலபிரதேசம், குஜராத், மேகாலயா, மத்திய பிரதேசம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, இவர்களில் சிலர் விடுதிகளில் தங்கிக்கொள்ள சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம் அனுமதி வழங்கி இருந்தது.

இந்த நிலையில் விடுதிகளில் தங்கி இருந்த பேராசிரியர்கள், மாணவர்கள் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பதை கருத்தில்கொண்டு, விடுதிகளில் தங்கி இருக்கும் மாணவர்களை திடீரென்று ஐ.ஐ.டி. நிர்வாகம் வெளியேற உத்தரவு பிறப்பித்துள்ளது.


இன்னும் 2 நாட்களுக்குள் விடுதிகளை விட்டு வெளியேற வேண்டும் அப்படி இல்லாவிட்டால் வெளியேற்றப்படுவார்கள் என்ற கடுமையான உத்தரவால், விடுதிகளில் தங்கி இருக்கும் மாணவர்களை கவலை அடைய செய்துள்ளது.

இதுகுறித்து மாணவர்கள் சில கூறுகையில், ‘தற்போது இருக்கும் ஊரடங்கால் வெகு தொலைவில் இருக்கும் எங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு எப்படி செல்ல முடியும்?. மற்ற ஐ.ஐ.டி.க்களில் மாணவர்களை நிர்வாகம் பாதுகாக்கிறது. ஆனால் சென்னை ஐ.ஐ.டி. வெளியேற்ற துடிக்கிறது. நாங்கள் எங்கே செல்வது?. நிர்வாகத்தின் இந்த உத்தரவால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது’ என்று குமுறுகின்றனர்.

மேலும் செய்திகள்