வாகன சோதனையின்போது வாலிபரை தாக்கியதாக புகார்: சங்கரன்கோவில் பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் மீது வழக்கு ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

வாகன சோதனையின்போது வாலிபரை தாக்கியதாக கூறப்படும் புகாரின் பேரில் சங்கரன்கோவில் பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் மீது மதுரை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2020-07-09 21:45 GMT
சங்கரன்கோவில்,

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் மலையான்குளத்தை சேர்ந்த தங்கத்துரை மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான், எனது நண்பர் ராமகிருஷ்ணனுடன் கடந்த 22.9.2019 அன்று மோட்டார் சைக்கிளில் புளியங்குடி சாலையில் சென்றபோது எங்களை சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலைய பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன், போலீஸ்காரர்கள் டேவிட்ராஜ், செந்தில்குமார், மகேஷ்குமார் ஆகியோர் நிறுத்தினர். ஆவணங்கள் இல்லை என்று கூறி என்னை தாக்கியதுடன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு என்னை இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா, சப்-இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி ஆகியோர் தாக்கினர்.

இந்த சம்பவம் தொடர்பாக சத்தியபிரபா உள்ளிட்ட போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய சங்கரன்கோவில் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டும் வழக்கு பதிவு செய்யவில்லை. எனவே சங்கரன்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது வழக்கு பதிவு செய்யவும், அந்த வழக்கை துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ஏ.கண்ணன், பாஸ்கர்மதுரம் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

இதையடுத்து நீதிபதி, “மனுதாரரின் புகார் மீது முகாந்திரம் இருப்பதால் போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டுள்ளார். எனவே மனுதாரரின் புகாரை சங்கரன்கோவில் போலீஸ் நிலையம் தவிர்த்து வேறு போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யவும், இந்த வழக்கை துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரிக்கவும் தென்காசி போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என உத்தரவிட்டார்.

இந்த நிலையில் வழக்கு சம்பந்தமாக நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, கோர்ட்டு உத்தரவின் பேரில் நெல்லை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், சங்கரன்கோவில் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா, சப்-இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி, பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் உள்பட 6 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்