கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக இயக்குனருக்கு கொரோனா

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக ஊழியர்கள், காப்பாளர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

Update: 2020-07-09 21:12 GMT
சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக ஊழியர்கள், காப்பாளர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மனநோயாளிகள் சிலருக்கும் தொற்று பரவல் ஏற்பட்டது. இந்தநிலையில் கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 24 நோயாளிகளும், மருத்துவ மாணவர்கள், ஊழியர்கள் உள்பட 16 பேரும் என மொத்தம் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதில் அந்த காப்பகத்தின் இயக்குனருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா பாதித்த நோயாளிகளும், மருத்துவப் பணியாளர்களும் தற்போது நலமாக இருக்கின்றனர் என்றும் கொரோனா தாக்கிய மன நோயாளிகள் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர் என்றும், தேவைப்பட்டால் அவர்கள் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள் என்றும் அக்காப்பகத்தின் இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் சரவணஜோதி தெரிவித்தார்.

40 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத்தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக வளாகத்துக்குள் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்