தமிழகத்தில் புதிதாக 4,244 பேருக்கு கொரோனா: 3,617 பேர் குணம்; 68 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் புதிதாக 4,244 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று 3,617 பேர் குணம் அடைந்தனர். 68 பேர் மரணம் அடைந்தனர்.

Update: 2020-07-12 23:15 GMT
சென்னை, 

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் 4,244 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 38 ஆயிரத்து 470 ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 77 ஆயிரத்து 338 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவில் இருந்து 3 ஆயிரத்து 617 பேர் நேற்று குணம் அடைந்தனர். இதுவரையில் 89 ஆயிரத்து 532 பேர் குணம் அடைந்து உள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் 43 பேர், தனியார் மருத்துவமனைகளில் 25 பேர் என 68 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 17 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த பட்டியலில் சென்னையில் 32 பேரும், மதுரை, திருவள்ளூரில் தலா 5 பேரும், செங்கல்பட்டு, விருதுநகரில் தலா 4 பேரும், காஞ்சீபுரம், தூத்துக்குடியில் தலா 3 பேரும், தேனி, ராமநாதபுரத்தில் தலா 2 பேரும், கோவை, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, நெல்லை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இடம்பெற்றுள்ளனர். தற்போது மொத்த கொரோனா உயிரிழப்பு 1,966 ஆக உள்ளது.

தமிழகத்தில் இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட 6 ஆயிரத்து 843 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 16 ஆயிரத்து 870 முதியவர்களும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதில் 12 வயதுக்கு உட்பட்ட 203 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 571 முதியவர்களும் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் புதிதாக 41 ஆயிரத்து 325 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதுவரை 15 லட்சத்து 42 ஆயிரத்து 234 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்