தியேட்டர்கள் மூடிக்கிடப்பதால் ரூ.1,500 கோடி இழப்பு: திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி

சினிமா தியேட்டர்கள் 4 மாதங்களாக மூடிக்கிடப்பதால், தியேட்டர் அதிபர்களுக்கு ரூ.1,500 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது என்று திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் பன்னீர்செல்வம் கூறினார்.

Update: 2020-07-27 20:53 GMT
சென்னை, 

சென்னையில் உள்ள ‘ரோகிணி’ தியேட்டர் அதிபரும், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் செயலாளருமான ஆர்.பன்னீர்செல்வம் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா ஊரடங்கு140 நாட்கள் ஆகிவிட்டன. திரையரங்கு உரிமையாளர்கள் எல்லாம் என்ன செய்வது? என்று தெரியாமல், வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் சிரமமான நிலையில் உள்ளனர். அவர்கள் என்ன செய்ய போகிறார்கள்? என்று அவர்களுக்கே தெரியாத நிலை இருக்கிறது. இதன் மூலம் ரூ.1,500 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

ஒவ்வொரு திரையரங்கத்துக்கும் ரூ.25 லட்சம் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த காலக்கட்டத்தில் படத்தயாரிப்புகள் இல்லாமல் சினிமா சார்பான இழப்பு ரூ.3 ஆயிரம் கோடி இருக்கும் என்று கூறுகிறார்கள்.

திரையரங்குகளை திறக்க எப்போது அனுமதி வழங்குவார்கள்? என்று நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இப்போது விமானங்கள் எல்லாம் இயங்க ஆரம்பித்துவிட்டன. விமானத்தில் நெருக்கமாக அமர்ந்து தான் பயணம் செய்கிறார்கள். விமானத்தில் வராத ‘கொரோனா’, திரையரங்குகளில் மட்டும் எப்படி வரும்?. திரையரங்கத்தில் ஏதாவது மாற்றம் செய்ய சொன்னால், செய்வதற்கு தயாராக இருக்கிறோம்.

விரைவில் திரையரங்குகள் திறப்பதற்கு தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றுக் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.

மேலும் செய்திகள்