குளிர்ந்த காற்றுடன் சென்னையில் இதமான சாரல் மழை: ரம்மியமான காலநிலை நிலவியது

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் மாலை வரை குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்ததன் காரணமாக ரம்மியமான காலநிலை நிலவியது.

Update: 2020-07-29 22:52 GMT
சென்னை, 

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வளிமண்டல காற்றழுத்தம் காரணமாக நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இந்த நிலையில் நேற்றும் அதிகாலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. சென்னை எழும்பூர், சென்டிரல், அண்ணாசாலை, புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தியாகராயநகர், மயிலாப்பூர், கோயம்பேடு, மாதவரம், மூலக்கடை, கொளத்தூர், திருவான்மியூர், செங்குன்றம், புழல் என சென்னை நகரம் முழுவதும் மற்றும் புறநகர் பகுதிகளிலும் சாரல் மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. இந்த இதமான சாரல் மழை மாலை வரை தொடர்ச்சியாக பெய்து கொண்டு இருந்தது.

இதனால் குளிர்ந்த காற்றுடன் ரம்மியமான காலநிலை நீடித்தது. சில இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. சாரல் மழை காரணமாக மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்கள் நனைந்தபடி சென்றனர். மழையால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதன் காரணமாக பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, கோயம்பேடு 100 அடி சாலை, கத்திப்பாரா சந்திப்பு, அண்ணா சாலையின் பிரதான இடங்களான நந்தனம், கிண்டி போன்ற இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

மேலும், மழை காரணமாக தியாகராயநகர் ரங்கநாதன் தெரு பகுதிகளில் ஆள்நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. இதே போன்று மைலாப்பூர் மார்க்கெட் பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது.

சாலைகளில் ஆங்காங்கே காணப்பட்ட குண்டு குழிகளில் மழை வெள்ளம் தேங்கி நின்றது. தொடர் மழை காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து இதமான குளிர்ச்சி நிலவியது.

மேலும் செய்திகள்