‘இ-பாஸ்’ முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை; அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை

‘இ-பாஸ்’ முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

Update: 2020-08-03 19:35 GMT
சென்னை,

சென்னை திரு.வி.க. நகர் மண்டலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய சித்த மருத்துவ பெட்டகமும், தூய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர், முககவசம், வைட்டமின் மாத்திரை, கிருமி நாசினி ஆகியவையும் வழங்கும் நிகழ்ச்சி புரசைவாக்கத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு இந்த பொருட்களை வழங்கினார். அப்போது அவர், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டி பேசினார்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுபடுத்தும் விதமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வது மட்டுமில்லாது, பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தடுப்புப் பணிகளை ஆய்வு செய்து, களப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்.

அந்தவகையில் புதன்கிழமை (நாளை), வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாட்களில் மதுரை, திண்டுக்கல், நெல்லை ஆகிய மாவட்டங்களில் முதல்-அமைச்சர் நேரில் சென்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்.

தற்போது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போது ‘இ-பாஸ்’ கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ‘இ-பாசை’ பொறுத்தவரை சரியான காரணங்களின் அடிப்படையில் அரசு வழங்கி வருகிறது.

‘இ-பாஸ்’ வழங்கும் பணியில் ஈடுபட்டு உள்ளவர்கள் மனிதநேயத்துடனும், மனசாட்சியுடனும் அணுக வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக விண்ணப்பம் செய்பவர்களுக்கு மட்டுமே ‘இ-பாஸ்’ வழங்கப்படுகிறது. ‘இ-பாஸ்’ வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ‘இ-பாஸ்’ வழங்குவதில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்