மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை - தென்காசி அணைகளில் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழையால் தென்காசி மாவட்ட அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

Update: 2020-08-04 11:50 GMT
தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் பலத்த மழையும், மற்ற பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது. குளுகுளு காற்றுடன் சாரல் மழை அவ்வப்போது பெய்வதால் குளிர்ச்சி நிலவுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அணைகளின் விவரம் பிவருமாறு:-

*  85 அடி உயரம் கொண்ட கடனாநதி அணை நீர்மட்டம்  9.50 அடி உயர்ந்து 51.50 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 391 கனஅடி நீர் வந்தது. 10 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. 

*  84 அடி உயரம் கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 7.50 அடி உயர்ந்து 66.50 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 216 கனஅடி நீர் வந்தது. 3 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

*  இதேபோல், 72 அடி உயரம் உள்ள கருப்பாநதி அணை நீர்மட்டம் 7 அடி உயர்ந்து 40.68 அடியாக உள்ளது. 133.22 அடி உயரம் உள்ள அடவிநயினார் கோவில் அணை நீர்மட்டம் 9 அடி உயர்ந்து 91 அடியாக இருந்தது.

* 36.10 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் இருப்பதால் அணைக்கு வரும் 49 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணைக்கு விநாடிக்கு 197 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 5 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 

இன்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறு அணைப் பகுதியில் 52 மி.மீ. மழை பதிவானது. 

மற்ற இடங்களில் பதிவான மழை அளவு (மில்லிமீட்டரில்) விவரம் வருமாறு:-

கருப்பாநதி அணை, அடவிநயினார்கோவில் அணையில் தலா 48மிமீ, செங்கோட்டை- 35மிமீ, தென்காசி- 22மிமீ, கடனாநதி அணை, ராமநதி அணையில் தலா 18மிமீ, ஆய்க்குடி- 7.20மிமீ, சங்கரன்கோவில்-1மிமீ ஆக பதிவானது.

மலைப் பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் நேற்று இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் இன்றும் வெள்ளப்பெருக்கு நீடித்துள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் இன்றி குற்றாலம் அருவி வெறிச்சோடி காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்