கொரோனா தொற்று குறித்த புள்ளிவிவரங்களை மாவட்ட வாரியாக வெளியிட கோரி தி.மு.க. எம்.எல்.ஏ. வழக்கு

கொரோனா வைரஸ் தொற்று குறித்த முழுமையான புள்ளி விவரங்களை மாவட்ட வாரியாக வெளியிட கோரி தி.மு.க., எம்.எல்.ஏ., தொடர்ந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-08-04 20:43 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், மதுரை மத்திய தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று சோதனை நடத்தப்பட்டுள்ளது? அதில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர்? கொரோனா வைரசுக்கு பலியானவர்கள் எத்தனை பேர்? என்ற விவரங்களை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டு வந்தாலும், அவை முழுமையான வகையில் இல்லை.

போதுமான விவரங்கள் இல்லாவிட்டால், ஆய்வு முடிவுகள் தவறாகக் கூடும். முழுமையான தகவல்களை வெளியிடாவிட்டால் தொற்றை கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளும் பலன் தராது. மதுரை மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து, இதுநாள் வரை அங்கு தொற்றை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் திறமையானதாக இல்லை.

முழுமையான தகவல்களை வெளியிட்டால் தான், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க முடியும். குறைபாடுடைய மற்றும் மறைக்கப்பட்ட தகவல்கள், கொரோனா நோய் குறித்த பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

மாநிலத்தில் ஒரு பகுதியில் முழு ஊரடங்கையும், மற்றொரு பகுதியில் எளிதான விதிமுறைகளுடனும் அமல்படுத்துவதால் மக்கள் கூட்டம் கூட்டமாக எல்லை தாண்டி செல்வதும், சரக்குகளை பதுக்குவதும், கொரோனா பரப்புவதற்கும் காரணமாகிவிடுகிறது. உயிர் பலி எண்ணிக்கையின் அடிப்படையில்தான் ஒரு நோயின் தீவிரத்தை கணிக்க முடியும். ஆனால், இந்த விஷயத்தில் தமிழக அரசு முழு விவரங்களை வெளியிடவில்லை. உலக சுகாதார நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் விதிகளை தமிழக அரசு பின்பற்றவில்லை.

கொரோனா வைரசுக்கு குணப்படுத்துவதற்கான மருந்தோ, தடுப்பு மருந்தோ கண்டுபிடிக்கப்படாத நிலையில் கொரோனா வைரசின் தாக்கத்தை முழுமையாக அரசு வெளியிட்டால்தான், தனிமைப்படுத்தி கொள்வது, தனிமனித விலகல் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிப்பது குறித்து மக்கள் விழிப்புணர்ச்சி அடைவார்கள்.

மாவட்ட வாரியாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், பலியானவர்களின் எண்ணிக்கை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கைகள் உள்ளிட்ட முழுமையான புள்ளிவிவரங்களை அந்தந்த மாவட்ட கலெக்டர் மூலம் வெளியிட உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில அரசு பிளடர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆஜராகி, “கொரோனா வைரஸ் தொற்று குறித்த அனைத்து விவரங்களை வெளிப்படைத்தன்மையுடன் தமிழக அரசு தினமும் வெளியிடுகிறது. இதில் எந்த தகவலையும் அரசு மறைப்பது இல்லை. மனுதாரர் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. என்பதால் தமிழக அரசு மீது வீண் பழியை சுமத்துகிறார்” என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து இந்த மனுவுக்கு 3 வாரத்துக்குள் விரிவான பதில் அளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்