போதை மறுவாழ்வு மையம் அருகே பாருடன் கூடிய மதுக்கடை; மூடும்படி நீதிபதிகள் உத்தரவு

தேனியில் போதை மறுவாழ்வு மையம் அருகே அமைந்த மதுக்கடையை உடனடியாக மூடும்படி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் இன்று உத்தரவிட்டனர்.

Update: 2020-08-06 16:36 GMT
மதுரை,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அன்னை சத்யா நகர் பகுதியில் மதுக்கடை ஒன்று அமைந்துள்ளது.  இதில் பாரும் இணைந்து உள்ளது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த கோபால் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், அன்னை சத்யா நகர் பகுதியில், அரசு அலுவலகங்கள் அதிகளவில் உள்ளன.  பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் ஆகியவை உள்ளன.  தேனியில் இருந்து ஆண்டிப்பட்டிக்கு செல்லும் வைகை அணைக்கான சாலையும் இந்த பகுதியில் அமைந்துள்ளது.  போதை மறுவாழ்வு மையம் அருகே மதுக்கடை அமைந்துள்ளது என தெரிவித்து உள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதிகள், அன்னை சத்யா நகர் பகுதியில் அமைந்துள்ள மதுக்கடை மற்றும் மதுக்கூடத்தை உடனடியாக மூட உத்தரவிட்டனர்.  டாஸ்மாக்கின் வருமானம் மூலம் அரசு சில நலத்திட்டங்களை செயல்படுத்தினாலும், டாஸ்மாக் கடைகள் திறந்ததில் பொதுநலன் ஏதுமில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களுக்கு அதனால் பலன் எதுவுமில்லை.  நலத்திட்டங்களை செய்வதற்கான வருவாய்க்காகவே டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன என அரசு தெரிவிக்கிறது.  இது ஏற்க கூடியதல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.

டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயம் செய்த விலையில் தான் மது விற்கப்படுகிறதா என்பது குறித்தும் மதுக்கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா போன்றவை குறித்தும் திடீர் ஆய்வு செய்து தேனி மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து, வழக்கு விசாரணை செப்டம்பர் மூன்றாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்