இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு: டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய மதுப்பிரியர்கள்

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று அமல்படுத்தப்பட இருப்பதால், டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் நேற்று அலைமோதினர். குறைந்த விலை மதுபாட்டில் கிடைக்காததால் பலர் விரக்தி அடைந்தனர்.

Update: 2020-08-08 23:00 GMT
File photo
சென்னை,

கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்பின்னர், ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், கடந்த 2 மாதங்களாக ஒவ்வொரு வாரத்தின் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது.

முழு ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்கும். இதனால் முழு ஊரடங்குக்கு முந்தைய நாளில் மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் தேனீக்கள் போல் மொய்த்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளியை பின்பற்ற டாஸ்மாக் கடைகளில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. அதனை முறையாக பின்பற்றி மதுப்பிரியர்கள் மதுபாட்டில்கள் வாங்கி சென்றனர்.

சென்னையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் சென்னைவாசிகள் அருகில் உள்ள திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட எல்லைகளை நோக்கி ஒவ்வொரு வாரமும் படையெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் சென்னை போலீஸ் எல்லையை தாண்டியுள்ள திருவள்ளூர் மாவட்ட எல்லைகளான அத்திப்பட்டு, பெரியபாளையம், விளவன்குளம், தாமரைப்பாக்கம் போன்ற இடங்களிலும், செங்கல்பட்டு மாவட்ட எல்லைப்பகுதிகளிலும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். பல டாஸ்மாக் கடைகளில் குறைந்த விலை மதுபாட்டில் கிடைக்காததால் மதுப்பிரியர்கள் விரக்தி அடைந்தனர்.
200 ரூபாய் குவாட்டர் பிராந்தி பாட்டிலுக்கு கடும் கிராக்கி இருந்தது. இதுதவிர பீர் பாட்டில் விற்பனையும் அதிகளவில் இருந்தது.

என்னதான் போலீசார் எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பில் இருந்தாலும், அவர்களை தாண்டி சென்னைவாசிகள் தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்கி வரத்தான் செய்கின்றனர்.

மேலும் செய்திகள்