கொரோனாவால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் கேட்டு வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

கொரோனாவால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் கேட்ட வழக்கு தொடர்பாக, ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை துவங்க உள்ளது.

Update: 2020-08-11 21:00 GMT
சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் அசோகன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநலன் மனுவில், “கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கடந்த ஆகஸ்டு 4-ந் தேதி வரை உலக நாடுகளில் ஒரு கோடியே 81 லட்சத்து 96 ஆயிரத்து 221 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 6 லட்சத்து 96 ஆயிரத்து 409 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் 18 லட்சத்து 58 ஆயிரத்து 689 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 39 ஆயிரத்து 828 பேர் இறந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தமிழக அரசு உரிய மருத்துவ சிகிச்சைகளை அளித்து குணப்படுத்தி வருகிறது.

ஆனால் மக்களின் அலட்சியப்போக்கினால் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனாவால் இறந்த பலரது குடும்பங்கள் இன்று போதிய வருமானமின்றி வாழ்வாதாரத்துக்காக சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகின்றன. அவர்களுக்கு நிதியுதவிகளை செய்யவில்லை என்றால் சமூகத்தில் குற்றச்செயல்கள் பெருக அரசே காரணமாகிவிடும். பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் இதுபோன்ற கொடிய தொற்றால் இறப்பவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். எனவே கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

மேலும் செய்திகள்